

ஈரோடு: மக்களவைத் தேர்தலுக்காக சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்துள்ளது, என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். கோபி-யில் நடந்த கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: மக்கள் மீது கொண்ட அக்கறையால், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப் படவில்லை.
மக்களைவைத் தேர்தலுக்காக விலை குறைக்கப்பட்டுள்ளது. மக்களை நம்ப வைத்து ஏமாற்றுகின்றனர். மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும். 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த பாஜக, தனித்து போட்டியிட்டு, எங்களை விட அதிக வாக்குகளை வாங்க முடியுமா? மக்களவைத் தேர்தல் வருவதால் சந்திரயான் விண்கலம் கூட சரியாக தரையிறங்கி இருக்கிறது.
நடிகர் ரஜினி காந்த் தமிழகத்தின் பெருமை. கலை களின் அடையாளம். அவர் உத்தர பிரதேச முதல்வர் காலில் விழுந்தது அவரது தனிப்பட்ட விருப்பம். மக்களவைத் தேர்தல் வருவதால் தான், தமிழக அரசுக்கு மாணவர்கள், மீனவர்கள் மீது திடீர் அக்கறை வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.