

சென்னை: இந்திய மற்றும் அமெரிக்க கடற்படையினர் இணைந்து கடல்சார் ரோந்து மற்றும் கண்காணிப்புகூட்டுப் பயிற்சியை மேற்கொண்டனர்.
இந்திய-பசிபிக் பெருங்கடலில் கடல்சார் பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக அமெரிக்க கடற்படையினர் இணைந்து அவ்வப்போது கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், தற்போது இருநாட்டுப் படைவீரர்களும் இணைந்து கடல்சார் ரோந்து மற்றும் கண்காணிப்பு கூட்டுப் பயிற்சி மேற்கொண்டனர்.
அரக்கோணத்தில் உள்ள ‘ஐஎன்எஸ் ராஜாளி’ கடற்படை விமான தளத்தில் ஒருவார காலம் இப்பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில், இந்திய கடற்படையின் 312 பி-81 என்ற போர் விமானமும், அமெரிக்க கடற்படையின் விபி 26 பி-84 என்ற போர் விமானமும் பயன்படுத்தப்பட்டன.
பயற்சியின் போது கடல்சார் ரோந்து மற்றும் கண்காணிப்பை மேம்படுத்துவது, கடலுக்குள் நீர்மூழ்கிக் கப்பல்கள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை முறியடிப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருநாட்டு வீரர்களும் பரஸ்பரம் பகிர்ந்துக் கொண்டனர்.
மேலும், கடல்சார் பாதுகாப்பில் உள்ள சவால்களும் அவற்றைஎதிர்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அத்துடன், போரின்போது திட்டமிட்டு செயல்படுவது, பயிற்சிகளை மேம்படுத்துவது, தளவாடங்களை கொண்டு செல்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
‘இந்தியாவுடன் எங்களது நல்லுறவையும் திறமைகளையும் வளர்த்து கடல்சார் பாதுகாப்பை மேற்கொள்ள ஒரு வாய்ப்பாக இப்பயிற்சி அமைந்துள்ளது’ என அமெரிக்க கடற்படையின் விபி-26-வது பிரிவின் அதிகாரி லெப்டினென்ட் ரியான் ஸ்பியர் தெரிவித்தார்.