

சென்னை: மூத்த அரசியல் தலைவர் ஜி.கே.மூப்பனாரின் 22-வது நினைவு தினத்தையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், தமாகா நிறுவனருமான ஜி.கே.மூப்பனாரின் 22-வது நினைவு தினம், சென்னை தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கம் பின்புறம் அமைந்துள்ள அவருடைய நினைவிடத்தில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில்தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் பங்கேற்று நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல், முன்னாள் எம்பிஜெயவர்த்தன் உள்ளிட்டோர் மூப்பனார் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் சார்பில் மாநில முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர், மாவட்ட தலைவர் சிவ.ராஜசேகரன் கலந்துகொண்டுஅஞ்சலி செலுத்தினர்.
பாஜக சார்பில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, துணைத் தலைவர் கரு.நாகராஜன்,உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர். தேமுதிக முன்னாள் எம்எல்ஏ பார்த்தசாரதி, பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.
மேலும் தமாகா பொதுச்செயலாளர்கள் சக்தி வடிவேல், விடியல்சேகர், ஜவகர்பாபு, திருவேங்கடம், இளைஞரணி தலைவர் யுவராஜா,மகளிரணி தலைவி ராணி உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக நினைவுதினத்தை முன்னிட்டு, மாவட்ட தலைவர் அருண்குமார் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம், ரவிசங்கர் ஏற்பாட்டில் தையல் இயந்திரங்கள், கட்சித் தலைமை சார்பில் சைக்கிள், தலைமை நிலையச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ் ஏற்பாட்டில் நிதியுதவி, மாணவரணி சார்பில் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு சட்ட நூல்கள் போன்ற நலத்திட்ட உதவிகளை கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வழங்கினார்.