Published : 31 Aug 2023 04:04 AM
Last Updated : 31 Aug 2023 04:04 AM
புதுச்சேரி: வீட்டுமனைப் பட்டா கேட்டு குழந்தைகளுடன் புதுச்சேரி சட்டப்பேரவையை பழங்குடியின நரிக்குறவர்கள் முற்றுகையிட்டனர். போலீஸார் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பழங்குடியின மக்களைச் சந்தித்த முதல்வர் ரங்கசாமி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி யளித்தார்.
புதுவை திருபுவனை தொகுதி மதகடிப்பட்டில் தனியார் சோப்பு நிறுவனத்தின் பின்புறம் உள்ள திடலில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர். சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இவர்களுக்கு மனைப்பட்டா வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. தேர்தலின்போதும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மனைப்பட்டா வழங்கவில்லை.
நேற்று பழங்குடியினர் தங்கள் குழந்தைகளோடும், கைகளில் வெற்று கேன்களுடனும் சட்டப்பேரவை வளாகத்தின் முன்பு வந்தனர். இதைக்கண்ட சட்டப்பேரவை காவலர்கள், போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால்பழங்குடியினருக்கும் போலீஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 30 ஆண்டுகளுக்கும் மேல் வசித்து வரும் தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி மனைப்பட்டா வழங்கவில்லை.
வெயிலிலும், மழையிலும் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம். முதல்வரை சந்திக்க எங்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். முதல்வர் சட்டப்பேரவையில் இல்லை. அவர் வந்தவுடன், அவரின் அனுமதி பெற்று உள்ளே அனுமதிப்பதாக தெரிவித்தனர். முதல்வர் வரும் வரை நிற்பதாகக் கூறி பாரதி பூங்கா நுழைவு வாயிலில் காத்திருந்தனர்.
போலீஸார் அங்கு வந்து, இங்கு நிற்கக் கூடாது என்று கூறி, பாரதி பூங்கா உள்ளே சென்று காத்திருக்கும்படி தெரிவித்தனர். அவர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால், அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு நிலவியது. பாதிக்கப்பட்டோர் கூறுகையில், "அனைத்து ஆவணங்களும் உள்ளன. எங்களுக்கு பட்டா தரவில்லை.
இதனால் குழந்தைகள் படிப்பதில் சிரமம் உள்ளது. தேர்தலின் போது வாக்குறுதி தந்து விட்டு, தற்போது தராதது ஏன் என தெரியவில்லை. விழுப்புரம், கடலூரில் இடம் தருகிறார்கள். புதுச்சேரியில்தான் மோசம்" என்றனர். போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி பூங்காவுக்குள் அனுப்பி வைத்தனர்.
முதல்வர் ரங்கசாமி சட்டப் பேரவைக்கு வந்தவுடன் அவரைப்பார்க்க பழங்குடியினர் குடும்பத்துடன் வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி, வாயிற் கதவை மூடினர். இதனால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் தகவலறிந்த முதல்வர் ரங்கசாமி அவர்களை பேரவையில் உள்ள தனது அறைக்கு அழைத்தார். விவரங்களை கேட்டறிந்து மனுவை அவர் பெற்றார்.
தங்களுக்கு இலவச வீட்டு மனைப் பட்டா தருமாறு கோரினர்.அதற்கு முதல்வர், "உரிய இடம் தேர்வு செய்து மனைப் பட்டா கண்டிப்பாக தரப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT