4 இருளர் பெண்களை போலீஸார் வல்லுறவு செய்த விவகாரம்: ஓய்வுபெற்ற பேராசிரியர் கல்யாணிக்கு எதிரான வன்கொடுமை வழக்கு விசாரணை ரத்து

4 இருளர் பெண்களை போலீஸார் வல்லுறவு செய்த விவகாரம்: ஓய்வுபெற்ற பேராசிரியர் கல்யாணிக்கு எதிரான வன்கொடுமை வழக்கு விசாரணை ரத்து
Updated on
1 min read

சென்னை: 4 இருளர் பெண்களை போலீஸார் பாலியல் வல்லுறவு செய்த விவகாரத்தில் அப்பெண்களுக்காக போராடிய ஓய்வு பெற்ற பேராசிரியர் கல்யாணிக்கு எதிராகப் பதியப்பட்ட எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்கு விசாரணையை ரத்து செய்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2011-ல் திருக்கோவிலூரைச் சேர்ந்த இருளர் வகுப்பைச் சேர்ந்த 4 இளம் பெண்களை திருக்கோவிலூர் போலீஸார் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவத்தில், நீதிமன்றத்தில் ஆஜராகிய அப்பெண்களை தங்கமணி என்பவர் கடத்திச் செல்ல முயன்றார். அந்த பெண்களை பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திண்டிவனம் பேராசிரியர் பிரபா கல்விமணி என்ற கல்யாணி (75) மற்றும் விழுப்புரம் பி.வி.ரமேஷ் (53) ஆகியோர் பாதுகாத்து, அவர்களுக்காக நீதி கேட்டுப் போராடியுள்ளனர்.

இந்நிலையில் தங்கமணி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸார் பேராசிரியர் கல்யாணி மற்றும் ரமேஷ் ஆகியோர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

ஆனால் தங்கமணிக்கு எதிராகப் பேராசிரியர் கல்யாணி கொடுத்த புகார் மீது போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், இதில் போலீஸார் மீதான பாலியல் குற்றச்சாட்டைத் திசை திருப்பும் நோக்கில் தங்கள் மீது போலீஸார் பொய் வழக்குப் பதிவு செய்திருப்பதாகவும், எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோரி பேராசிரியர் கல்யாணி மற்றும் ரமேஷ் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீதிபதி எம்.நிர்மல் குமார் முன்பாக காணொலி காட்சி மூலம் நடந்தது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ப.விஜேந்திரன் ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, குற்றம்சாட்டப்பட்ட பேராசிரியர் கல்யாணி மற்றும் விழுப்புரம் ரமேஷ் ஆகியோருக்கு எதிராக விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கு விசாரணையை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in