Last Updated : 13 Dec, 2017 08:45 AM

 

Published : 13 Dec 2017 08:45 AM
Last Updated : 13 Dec 2017 08:45 AM

‘முடிந்தால் முடியும்.. தொடர்ந்தால் தொடரும்.. இதுதான் எங்கள் வாழ்க்கை’: மீன்பிடி தொழிலில் இருந்து விலகும் கடலோடிகள் - காப்பாற்றிய கடல் அன்னை கைவிடுகிறாளா?

சுனாமிக்குப் பிறகு தங்களுக்கு மீண்டும் இப்படி ஒரு பேரிடர் நிகழும் என்று குமரி மாவட்ட மீனவர்கள் கனவில்கூட நினைத்திருக்க மாட்டார்கள். கடந்த நவம்பர் 30-ம் தேதி கோர தாண்டவமாடிய ஒக்கி புயலால் கன்னியாகுமரி மாவட்டம் நிலைகுலைந்தது.

புயல் எச்சரிக்கைக்கு முன்பே ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற 3,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் சூறைக்காற்றில் சிக்கி படகுகள் திசை மாறிச் சென்றதால் நடுக்கடலில் தத்தளித்தனர். காப்பாற்ற யாருமின்றி, படகுகளின் உடைந்த பாகங்களை பிடித்துக்கொண்டு உயிர் பிழைப்பதற்காக நாள் கணக்கில் போராட்டம் நடத்தியும் பல மீனவர்கள் மீண்டுவர முடியாமல் கடலிலேயே இறந்த பரிதாபம் நிகழ்ந்தது.

கடலையே வாழ்வாதாரமாகக் கொண்ட கடலோடிகளின் வாழ்க்கை இன்று கையறு நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. மீனவரை நம்பி வாழும் மனைவி, குழந்தைகள் மத்தியில் அச்சம் கலந்த சோகம் தென்படுகிறது. தந்தையருடன் கடல் தொழிலுக்குச் செல்ல 18 வயதில் மகன்களை வழியனுப்பி வைத்த மீனவ தாய்மார்கள், தற்போது ‘வேண்டாம் மகனே நமக்கு இந்த தொழில். வேறு ஏதாவது வேலை செய்து பிழைக்கலாம்’ என்று கூறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கடலுக்குச் செல்லும் மீனவர்கள் பாதுகாப்புடன் திரும்பி வருவது கேள்விக்குறியாகிவிட்டது. புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தில், மீட்பு பணிகளை மேற்கொள்ள கடலோரப் பாதுகாப்பு குழுமத்திடம் ஒரு நவீன படகுகூட இல்லை என்பது அதிர்ச்சி தகவல். மீனவர்களின் படகுகளை இரவல் வாங்கித்தான் தேடும் பணி நடக்கிறது. திசை தெரியாமல் எல்லைதாண்டிச் செல்லும் மீனவர்கள் பிற நாட்டினரால் சுடப்படுவது, கைது செய்யப்படுவதும் தொடர்கிறது.

ஒருபுறம் இயற்கையின் கோர தாண்டவம், மறுபுறம் காப்பாற்ற வேண்டிய அரசுகள் கடமையை மறந்ததால் மீனவர்கள் மத்தியில் தொழில் ஆர்வம் குறைந்துவிட்டது. ஒக்கி புயலுக்குப் பிறகு, குமரியில் மீனவர்கள் 13 நாளாக கடலுக்குச் செல்லவில்லை.

மீன்பிடி தொழிலைப் பொறுத்தவரை கடலுக்குள் செல்வது தீயின் மீது பயணம் செய்வது போன்றது என்கிறார் சவுதியில் 30 ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் ராஜாக்கமங்கலத்தைச் சேர்ந்த மரியஜான். ‘‘சவுதியில் தரின் என்ற கடல் பகுதியில் மீன்பிடி படகு ஓட்டும் மாலுமியாக இருந்தேன். கடந்த மார்ச் 17-ம் தேதி பெந்தர் கலீல் என்ற அந்தப் படகை எனக்கு பதிலாக கேசவன்புத்தன்துறையைச் சேர்ந்த ஜார்ஜ் ஓட்டிச் சென்றார். 80 நாட்டிகல் மைல் தொலைவில் சென்றபோது சூறைக்காற்று வீசி படகு சரிந்துள்ளது. அதில் இருந்த குமரி மாவட்டம் கோவளத்தைச் சேர்ந்த ஜோசப், ஜார்ஜ், அருள் நேவி ஆகிய 3 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அருள்நேவியின் உடல் இதுவரை கிடைக்கவில்லை’’ என்கிறார் சோகம் தோய்ந்த குரலில்.

அழிவை தருவது ஏன்?

‘‘நானும் தந்தையுடன் கடலுக்குச் சென்று வந்தவன்தான். பெற்ற தாயைவிட கடலை அதிகம் நேசிப்பவர்கள் மீனவர்கள். ஆனால், கடல் அன்னை ஆவேசமடைந்து அவ்வப்போது எங்களுக்கு அழிவைத் தருவது ஏன் என்று இதுவரை எங்களால் ஊகிக்க முடியவில்லை. ஒக்கி புயலின் தாக்கம் இந்த அளவு வீரியமாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. ஆழ்கடலில் மீன்பிடித்த மீனவர்களிடம் புயல் குறித்த முன்னெச்சரிக்கை தகவல் முழுமையாகச் சென்றடையாததால்தான் உயிரிழப்பு அதிகமானது’’ என்கிறார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை வழிநடத்திச் செல்லும் ராஜாக்கமங்கலம் துறைபங்குத்தந்தை சி.ராஜ்.

‘‘15 வயதில் இருந்து கட்டுமரத்தில் மீன்பிடிக்கத் தொடங்கினேன். குஜராத், ஒடிசா, மகாராஷ்டிர கடல் பகுதிகளில், விசைப்படகுகளில் குழுவாக தங்கி மீன்பிடித்துள்ளேன். படகில் வைத்திருக்கும் ‘எக்கோ சவுண்ட்’ கருவி மூலம் கடல் அதிர்வுகள், ஆழத்தைப் பார்த்து படகை ஓட்டிச் செல்கிறோம். திசைமானியும் வைத்துள்ளோம். ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும்போது, இரவு 9 மணிக்கு மேல் அமைதியான சூழல் நிலவும் பகுதியில் படகுகளை நிறுத்தி, அதிகாலை 5 மணி வரை தூங்குவோம். பெரும்பாலும் தீவு போன்ற பகுதிகளின் அருகே படகுகளை நிறுத்துவோம். பிற படகுகள் எங்களை அடையாளம் காண்பதற்காக விளக்குகளை ஒளிரவிட்டிருப்போம்.

1997-ல் ஒடிசா கடல் பகுதியில் படகை நிறுத்திவிட்டு, இரவில் தூங்கிக்கொண்டு இருந்தபோது புயலால் எங்கள் படகு கடலில் கவிழ்ந்தது. 12 பேரும் ஒன்றரை மணி நேரத்துக்கு மேல் நடுக்கடலில் தத்தளித்தோம். அந்த வழியாக மற்றொரு படகில் வந்தவர்கள் காப்பாற்றி கரைசேர்த்தனர். தற்போது செல்போன்கள் மூலம் 30 நாட்டிகல் மைல் தொலைவு வரை உறவினர்களை தொடர்புகொள்ள முடிகிறது. அதற்குமேல் சென்று, பேரிடரில் சிக்கினால், யாருக்கும் தகவல்கூட தெரிவிக்க முடியாது’’ என்கிறார் 50 ஆண்டுகளுக்கு மேல் மீன்பிடித்துவரும் குளச்சலை சேர்ந்த ஜோசப்.

பாதுகாப்பு இல்லாத தொழில்

கேரளாவில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது படகு கவிழ்ந்து 2 நாட்களுக்குப் பிறகு கடற்படையினரால் மீட்கப்பட்ட ஜார்ஜ் (30), படுகாயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். பெரியகாடு மீனவ கிராமம் அருகே வசிக்கும் அவரது பெற்றோர் சிலுவை - மேரியிடம் பேசியபோது, ‘‘எங்களுக்கு இருக்கும் ஒரே ஆறுதல் மகன் ஜார்ஜ்தான். அவன் கடலில் மூழ்கியிருந்தால் நாங்களும் உலகத்தைவிட்டுப் போயிருப்போம். இந்த மீன்பிடி தொழில், உசிருக்கு பாதுகாப்பு இல்லாத தொழில். இது நம்மளோட போகட்டும். கடலோரம் இருக்கிறவங்க இனிமே பிள்ளைகளை வேறு தொழிலுக்குதான் அனுப்பணும்’’ என்று விரக்தியோடு கூறினர்.

‘‘புயலுக்குப் பிறகு என் மனைவியும், உறவினர்களும் வேறு வேலைக்கு போகச் சொல்றாங்க. எனக்கு வேறு தொழில் தெரியாது. ஆழ்கடலுக்குப் போகாமல் கரையோரத்தில்தான் இனிமேல் மீன்பிடிக்க வேண்டும். ஒன்று நிச்சயம்.. மீன்பிடி தொழிலில் இனி எவ்வளவு நவீனமுறைகள் வந்தாலும், எங்கள் குழந்தைகளை இதில் ஈடுபடுத்த மாட்டோம். அடுத்த தலைமுறையை கடலுக்கு காவு கொடுக்க விரும்பவில்லை” என்கிறார் ஜான் பிரிட்டோ(30).

குமரி மாவட்ட கட்டுமர சங்கத் தலைவர் எம்.வில்லியம் கூறும்போது, “மீனவர்களுக்காக மத்திய அரசு தனி அமைச்சகம்கூட ஏற்படுத்தவில்லை. மீனவர்கள் அதிகம் வசிக்கும் குமரி மாவட்டத்தில் அவர்களுக்கு தனி தொகுதி வேண்டும். ஆனால், இதுவரை இக்கோரிக்கைக்கு அரசு செவிசாய்க்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால் கடலோர கிராம மக்கள் மீன்பிடி தொழிலை விட்டு மாற்றுத் தொழிலுக்கு செல்வது உறுதி. புயலுக்கு 40 நாட்கள் முன்பு துபாயில் மீன்பிடிக்கச் சென்றபோது ஈரான் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட குமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஆல்பர்ட் நியூட்டன், ஜீடு பிராங் கெர்பன் ஆகியோர் கிரீஸில் கடலுக்குள் படகில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அவர்களை மீட்க அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றார்.

ஒக்கி புயல் பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், குழந்தைகளின் எதிர்காலம் குறித்த கவலையும் மீனவ குடும்பங்களைச் சூழ்ந்துள்ளது.

கடலோடிகளின் வாழ்க்கை கரைசேருமா? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x