Published : 13 Dec 2017 12:56 PM
Last Updated : 13 Dec 2017 12:56 PM

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் தஷ்வந்துக்கு சரமாரி அடி உதை: பெண்கள் ஆவேசம்

பக்கத்து வீட்டு சிறுமி ஹாசினியையும் தனது தாயையும் கொலை செய்த இளைஞர் தஷ்வந்தை போலீஸார் இன்று (புதன்கிழமை) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தியபோது அவரை பெண்கள் சிலர் ஆவேசமாக தாக்கினர்.

இதனால் நீதிமன்றத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

சிறுமி ஹாசினையை பாலியல் பலாத்காரம் செய்து எரித்துக்கொன்ற தஷ்வந்த் அண்மையில் ஜாமீனில் வெளிவந்தார். இந்நிலையில், தனது தாயையும் கொலை செய்து மும்பை தப்பிச்சென்று கைதானார்.

சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவர் ஹாசினி கொலை வழக்குக்காக செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்துக்கு (இன்று) அழைத்து வரப்பட்டபோது பொதுமக்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் அவர் மீது தாக்குதல் நடத்தினர். அவருக்கு சரமாரி அடி உதை விழுந்தது.

தஷ்வந்தின் குற்றப்பட்டியல்..

கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாங்காடு பகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமி ஹாசினியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக எரித்துக்கொன்ற தஷ்வந்த் போலீஸாரால் கைது செய்யபட்டு சிறுமி கொலை, பலாத்காரம் ஆகிய வழக்குகளில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த், குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.

இந்நிலையில் கடந்த டிச.2 அன்று காலை தஷ்வந்தின் தாயார் சரளா படுகாயங்களுடன் அவரது வீட்டில் பிணமாகக் கிடந்தார். அவரை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்த தஷ்வந்த் வீட்டிலிருந்த நகை பணத்துடன் தலைமறைவானார். தஷ்வந்தைப் பிடிக்க போலீஸார் பல்வேறு கோணங்களில் தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். தஷ்வந்தின் செல்போனையும் போலீஸார் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை போலீஸார் கைது செய்தனர். பின்னர் சென்னை அழைத்து வரப்பட்ட தஷ்வந்த் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை, பலாத்கார வழக்கில் ஆஜராகாததால் தஷ்வந்துக்கு பிடியாணை பிறப்பித்து ஆஜர்படுத்த செங்கல்பட்டு மகிளா நீதிமன்ற நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். இதையடுத்து இன்று காலை ஹாசினி கொலை வழக்கில் ஆஜர்படுத்த அவரை போலீஸார் பாதுகாப்புடன் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.

தஷ்வந்த் நீதிமன்றம் கொண்டுவரப்படும் செய்தி கேட்டு நீதிமன்ற வளாகத்தில் பொதுமக்கள், மாதர் சங்கத்தினர், வழக்கறிஞர்கள் திரண்டிருந்தனர். இதனால் வழக்கு நேரம் வரும்வரை காவல் வாகனத்தில் பாதுகாப்பாக அவரை அமர்த்தி வைத்திருந்தனர். பின்னர் வழக்குக்காக அவரை பாதுகாப்புடன் போலீஸார் அழைத்துச் சென்றனர்.

அப்போது அவரை சூழ்ந்து நின்ற பெண்கள் அவரை சரமாரியாக தாக்கினர். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த தஷ்வந்த் அங்கிருந்து ஓட முயன்றார். அவரை போலீஸார் சுற்றி சூழ்ந்து காக்க முயன்றனர். ஆனால் போலீஸாரையும் மீறி நான்கு பக்கமும் பொது மக்களும் வழக்கறிஞர்களும் தாக்குதல் நடத்தினர். ஒருவழியாக போலீஸார் பாதுகாப்பாக நீதிமன்றம் உள்ளே அழைத்துச்சென்றனர்.

வழக்கறிஞர் விலகல்:

இளைஞர் தஷ்வந்த் தொடர்ந்து கொடூரமாக குற்றச்செயலில் ஈடுபட்டதால் அவருக்கு ஆஜராகவிருந்த வழக்கறிஞரும் விலகியதாக கூறப்படுகிறது. மேலும் வழக்கு முடிந்து வெளியே வரவிருக்கும் தஷ்வந்தை தாக்க பொதுமக்கள் திரண்டு நிற்பதால் பாதுகாப்புக்கு கூடுதல் போலீஸார் வரவழைக்கப்பட உள்ளனர். வருங்காலங்களில் தஷ்வந்த் மீதுள்ள பொதுமக்கள் கோபத்தை கருதி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வழக்கு நடக்க போலீஸார் கோரிக்கை வைப்பார்கள் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x