Published : 30 Aug 2023 02:35 PM
Last Updated : 30 Aug 2023 02:35 PM
சென்னை: என்எல்சி-க்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களின் உரிமையாளர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்படவில்லை எனக் கூறி தொடரப்பட்டுள்ள வழக்கில் நிறுவனத்தை எதிர்மனுதாரராக சேர்க்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், என்எல்சிக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டதால் பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்டோர் நலச் சங்கம் தாக்கல் செய்த மனுவில், “என்எல்சிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்காக நிலங்களின் உரிமையாளர்களுக்கு உறுதியளித்தபடி போதுமான இழப்பீடு வழங்கப்படவில்லை. நிலம் வழங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு வேலைவாய்ப்பும் வழங்கப்படவில்லை.
நில உரிமையாளர்களின் மறுவாழ்வுக்கு தமிழக அரசு எந்தத் திட்டத்தையும் வகுக்கவில்லை. சட்ட விதிகளின்படி, இழப்பீடு, மறுவாழ்வு, மறு குடியமர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை முடிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்" என மனுவில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில், தமிழக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியர் மட்டுமே எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, என்எல்சி தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்த நீதிபதிகள், என்எல்சி நிறுவனத்தை எதிர்மனுதாரராக சேர்க்க உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 4-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT