Published : 30 Aug 2023 05:29 AM
Last Updated : 30 Aug 2023 05:29 AM

போதைப் பொருள் கடத்தலில் முன்னாள் உதவியாளருக்கு தொடர்பு; தேசிய புலனாய்வு முகமை சம்மன் எதுவும் அனுப்பவில்லை: நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கம்

சென்னை: போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் வழக்கில் நடிகை வரலட்சுமியின் உதவியாளருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், விசாரணைக்கு ஆஜராகும்படி தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனக்கு சம்மன் அனுப்பவில்லை என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

2021-ல் கேரள மாநிலம் விழிஞ்சியம் கடற்பகுதியில் படகு மூலம் கடத்திவரப்பட்ட 327 கிலோ ஹெராயின், 5 ஏகே-47 துப்பாக்கிகள், 1,000 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

இந்த விவகாரத்தில் இலங்கையைச் சேர்ந்த 10 பேர் உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், சில தினங்களுக்கு முன் சென்னை சேலையூரைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் லிங்கம் (எ) ஆதிலிங்கம் (43) கைது செய்யப்பட்டார். அவர் சினிமா, அரசியல் பிரமுகர்கள் மற்றும் கடத்தல் வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் குணசேகரன் என்பவருடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.

குணசேகரனின் பினாமியான ஆதிலிங்கம், போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் மூலமாக வரும் பணத்தை கிரிப்டோ கரன்சி, சினிமா மற்றும் அரசியலில் முதலீடு செய்துள்ளார். மேலும், ஆதிலிங்கம் திரைப்பட ஃபைனான்சியர்களுக்கு நிதியுதவி செய்ததாகவும் கூறப்படுகிறது.

நடிகை வரலட்சமியின் முன்னாள் மேலாளராகவும் ஆதிலிங்கம் இருந்துள்ளார். இதையடுத்து, போதைப் பொருள் மற்றும் ஆயுதக் கடத்தல் விவகாரம் தொடர்பாக நடிகை வரலட்சுமியிடம் விசாரணை நடத்த என்ஐஏ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும், இது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறும் வரலட்சுமிக்கு என்ஐஏ சம்மன் அனுப்பியதாக தகவல் வெளியானது.

இந்த தகவல் திரைப்பட வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், என்ஐஏவிடமிருந்து தனக்கு எந்த சம்மனும் வரவில்லை என்று நடிகை வரலட்சுமி விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறிருப்பதாவது: என்ஐஏ எனக்கு சம்மன் அனுப்பியதாக வரும் செய்திகளில் உண்மை இல்லை. நேரில் ஆஜராகுமாறு எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. ஆதிலிங்கம் என்பவர் 3 வருடங்களுக்கு முன் என்னிடம் சிறிதுகாலம் ‘ஃப்ரீலான்ஸ்’ மேலாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் எனக்கும், ஆதிலிங்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஆதிலிங்கம் கைது செய்யப்பட்ட செய்தி எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. தேவைப்பட்டால் அரசுக்கு ஒத்துழைப்பதில் மகிழ்ச்சிதான்.

எந்தவித உண்மையும் இல்லாமல், விளக்கமும் கேட்காமல் பிரபலங்களை செய்திகளில் இழுத்துவிடுவது வருத்தமும், ஏமாற்றமும் அளிக்கிறது.

இவ்வாறு அறிக்கையில் வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x