

சென்னை: வடலூரில் இன்று (ஆக. 30) பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ள உயர் நீதிமன்றம், விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் வடலூர் பேருந்து நிலையம் அருகே இன்று பாமக சார்பில் 35-ம் ஆண்டு விழா பொதுக் கூட்டம் நடத்த நெய்வேலி டிஎஸ்பி மற்றும் வடலூர் போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து, அக்கட்சியின் மாவட்டச் செயலர் முத்துகிருஷ்ணன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஏ.தாமோதரன் ஆஜராகி, “நெய்வேலி என்எல்சி விவகாரத்தில் பாமக சார்பில் நடத்தப்பட்ட பொதுக் கூட்டத்தில் வன்முறை வெடித்தது. அதில் 27 பேருந்துகள் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன” என்று கூறி, அதற்கான ஆதாரங்களை தாக்கல் செய்தார்.
மேலும், “இது தொடர்பாக பாமகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது வடலூரில் ஆண்டு விழா என்ற பெயரில் மீண்டும் என்எல்சி விவகாரம் குறித்தே பேச வாய்ப்புள்ளது. மேலும், நெய்வேலியில் வன்முறையில் ஈடுபட்டவர்களுக்கு இதில் பாராட்டு விழா நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்துக்கு அனுமதி அளித்தால், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்” என்று தெரிவித்து, கூட்டத்துக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.
பாமக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.பாலு, “அரசு வழக்கறிஞர் பாமக மீது அரசியல் ரீதியாக குற்றம் சாட்டுகிறார். பொதுக்கூட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. அனுமதி கோரி கடந்த 17-ம் தேதி மனு அளிக்கப்பட்டது. தற்போது போலீஸார் அனுமதி மறுத்துள்ளனர். அரசியல் கட்சி பொதுக்கூட்டம் நடத்துவது சட்டப்பூர்வ உரிமை. ஒருவேளை வடலூரில் அனுமதி தரவில்லை என்றால், நெய்வேலியில் இருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள குள்ளஞ்சாவடியில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும்” என்றார்.
அப்போது குறுக்கிட்ட அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஏ.தாமோதரன், “தற்போதுள்ள சூழலில் கடலூர் மாவட்டத்தில் எங்கும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்கக் கூடாது” என்று ஆட்சேபம் தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில், “பொதுக்கூட்டம் நடத்துவது அரசியல் கட்சியின் உரிமை என்றாலும், நெய்வேலி சம்பவத்தை சுட்டிக்காட்டி, சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படும் என்ற காவல் துறையின் அச்சத்தையும் கருத்தில்கொள்ள வேண்டியுள்ளது. கள நிலவரத்தை கருத்தில் கொள்ளாமல், நீதிமன்றம் வேடிக்கைப் பார்க்க முடியாது.
எனவே, கடலூர் மாவட்டத்தில் பாமக சார்பில் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்க முடியாது. ஆனால், விழுப்புரம் அல்லது கள்ளக்குறிச்சியில் ஆக. 30-ம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் 8 மணி வரை பொதுக்கூட்டம் நடத்திக் கொள்ளலாம். அதில், என்எல்சி விவகாரம் குறித்து பேசக்கூடாது. பாராட்டு விழா நடத்தக் கூடாது என்ற நிபந்தனைகளுடன் போலீஸார் அனுமதி வழங்கலாம்.
சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாதவாறு கட்சியினரை வழி நடத்த வேண்டிய பொறுப்பு கட்சித் தலைமைக்குத்தான் உள்ளது. மீறி ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், கட்சித் தலைமையே பொறுப்பேற்க வேண்டும்” என்று உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.
அன்புமணி கண்டனம்: இது தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “வழக்கு விசாரணையில் பாமக மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது கண்டிக்கத்தக்கது.
கடலூர் மாவட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை பொதுக்கூட்டத்தில் பேசித்தான் ஆக வேண்டும். எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்படும். பொதுக்கூட்டத்தை கடலூர் மாவட்டத்திலேயே நடத்துவதற்கான அனுமதியை சட்டப் போராட்டம் மூலம் வென்றேடுப்போம். என்எல்சி செயல்பாடுகளுக்கு திமுக அரசு துணை போவது குறித்து அதில் பேசுவோம். அடக்குமுறைகளால் பாமகவை அடிபணிய வைக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.