

சென்னை: சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் நேற்று அதிகாலை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக ஒரு சில பகுதிகளில் இடி-மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதையொட்டி, சென்னையில் நேற்று முன்தினம் பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், நள்ளிரவு முதல் மழை பெய்யத் தொடங்கியது. இடி-மின்னலுடன் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை கொட்டியது.
இதே போல சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய தாம்பரம், பூந்தமல்லி, புழல், செங்குன்றம், மதுரவாயல், போரூர், கீழ்க்கட்டளை, பல்லாவரம், சோழிங்கநல்லூர், ஆவடி, திருநின்றவூர் உள்ளிட்ட பல்வேறு புறநகர்ப் பகுதியிலும் மழை பெய்தது. ஒரு சில இடங்களில் கன மழையாகவும், சில பகுதிகளில் லேசாகவும் மழை பெய்தது. காலை 6 மணி வரை சாரல் மழை தொடர்ந்து கொண்டே இருந்தது. இவ்வாறு நள்ளிரவில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
சில பகுதிகளில் மழைநீர் தேக்கம்: புதுப்பேட்டை லேங்க்ஸ் தோட்டச் சாலை, கோபாலபுரம் விளையாட்டு மைதானம், நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலக வளாகம், அவ்வை சண்முகம் சாலை, அண்ணா சாலை உட்ஸ் ரோடு, ராயப்பேட்டை பகுதி, கோயம்பேடு சந்தை என பல்வேறு முக்கிய இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.
குறிப்பாக மடிப்பாக்கம் பகுதியில் அதிகளவிலான மழைநீர் தேங்கியது. ராம் நகர், ராஜாஜி நகர், குபேரன் நகர், எல்ஐசி நகர் போன்ற பகுதிகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதியடைந்தனர். காலை வரை மழைநீரை அகற்ற நடவடிக்கை இல்லை என அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.
அதேநேரம், சென்னையில் பெரும்பாலான சாலைகளில் மழைநீர் உடனடியாக வடிந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், மழை தீவிரமடையும் முன் வடிகால் பணிகளை முடிக்க வேண்டும் என சென்னை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
மழை அளவைப் பொருத்தவரை, அதிகபட்சமாக கோடம்பாக்கத்தில் 7 செமீ மழை பதிவானது. இதற்கு அடுத்தபடியாக வானகரம், அண்ணாநகரில் 6, நுங்கம்பாக்கத்தில் 5, டிஜிபி அலுவலகம், அயனாவரம் தாலுகா அலுவலகம், ஐஸ் ஹவுஸ், கொளத்தூர், மலர் காலனி, அடையாறு சுற்றுச்சூழல் பூங்கா, ஒய்எம்சிஏ நந்தனத்தில் தலா 4, சோழிங்கநல்லூர், எம்ஜிஆர் நகர், தேனாம்பேட்டை, மணலி, அண்ணா பல்கலைக்கழகம், திருவிக நகர், ஆலந்தூர், தண்டையார்பேட்டையில் தலா 3, பெரம்பூரில் 2, சென்னை ஆட்சியர் அலுவலகம், அண்ணா பல்கலைக்கழகத்தில் தலா ஒரு செமீ மழை பதிவானது. இதைத் தொடர்ந்து நேற்றைய தினம் முழுவதும் மிதமான வெயில் நிலவியது.