

சென்னை: சென்னையில் மலையாள மொழி பேசும் மக்களால் ஓணம் பண்டிகை நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஐயப்பன் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
தென் தமிழகம் மற்றும் கேரள மாநிலத்தில் ஓணம் பண்டிகை பாரம்பரியத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கேரள மக்களால் சாதி, மத வேறுபாடின்றி, மலையாள வருடப் பிறப்பின் முதல் மாதமான `சிங்ஙம்' (ஆவணி) மாதத்தில் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை கேரளத்தின் `அறுவடைத் திருநாள்' என்றும் அழைப்பார்கள்.
சிங்ஙம் மாதத்தில் ஹஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கி, திருவோணம் நட்சத்திரம் வரையிலான 10 நாட்களுக்கு ஓணம் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். கேரளாவை ஆண்ட மகாபலி சக்கரவர்த்தி ஆண்டுதோறும் மக்களைக் காண வரும்போது, அவரை வரவேற்கும் வகையில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதாக ஐதீகம் உள்ளது.
சென்னையில் வசிக்கும் மலையாள மொழி பேசும் மக்களால் நேற்று ஓணம் பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நேற்று அதிகாலையில் எழுந்து, வீட்டின் வாயிலில் வண்ண வண்ண மலர்களால் அத்தப்பூ கோலமிட்டனர். பின்னர் பாரம்பரிய உடைகளை அணிந்து, கோயில்களுக்குச் சென்று வழிபட்டனர்.
சென்னை மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணா நகரில் உள்ள ஐயப்பன் கோயில்களில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இவற்றில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
மகாலிங்கபுரம் ஐயப்பன் கோயிலில் பூக்கோலமிட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. கோயிலுக்கு வந்த பக்தர்கள் பரஸ்பரம் ஓணம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர். கோயில் சார்பில் பக்தர்களுக்கு பாயசம், லட்டு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
வீடுகளில் ‘ஒண சத்ய’ எனப்படும் சிறப்பு விருந்து செய்யப்பட்டது. பாயசம், அவியல், எரிசேரி, புளிசேரி, இஞ்சிப்புளி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட பதார்த்தங்கள் விருந்தில் இடம் பெற்றன. மேலும், ஹோட்டல்களிலும் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஓணம் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் உள்ள சில மலையாளி சங்கங்களில் சிறப்பு சந்தை நடைபெற்றது. அவற்றில் கேரள புடவை, வேஷ்டி உள்ளிட்ட ஆடைகள், நேந்திரம் சிப்ஸ், அப்பம் உள்ளிட்ட தின்பண்டங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதேபோல, சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் ஓணம் பண்டிகை நேற்று விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.