

சென்னை: சென்னை பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தின் 50-ம் ஆண்டு பொன் விழா மற்றும் ஆலயத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலய வளாகத்தின் முன்பு உள்ள கொடி மரத்தில், ஆரோக்கிய மாதா கொடியை சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி ஏற்றினார்.
அப்போது ஆலய மணி ஒலிக்க, மாதாவின் புகழைக் கூறும் பாடல்களும் ஒலிபரப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து ஜெப மாலை வடிவிலான பெரிய பலூன்களும் பறக்கவிடப்பட்டன. முன்னதாக ஆலயத் திருவிழா கொடியேற்றத்துக்காக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் பாதயாத்திரையாக வந்திருந்தனர். கொடியேற்ற நிகழ்வு முடிந்ததும், சிறப்பு கூட்டுத் திருப்பலி நடந்தது. அதனை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி நடத்தினார்.
இந்த நிகழ்வில் ஆலயத்தின் பாதிரியார் வின்சென்ட் சின்னதுரை உட்பட இறை மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்றுமுதல் (புதன்கிழமை) வரும் 8-ம்தேதி (வெள்ளிக்கிழமை) வரை மாலை 5.30 மணிக்கு நவநாள் ஜெபம், ஜெபமாலை, சிறப்பு மற்றும் கூட்டுத் திருப்பலி, ஆராதனை ஆகியவை பிற மாவட்ட ஆயர்கள் மற்றும் பாதிரியார்கள் மூலம் நடத்தப்படவுள்ளன.
கொடியேற்ற விழாவையொட்டி, பக்தர்கள் வசதிக்காக பெசன்ட்நகர் ஆலயத்துக்கு வரும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கண்காணிப்பு பணியில் 800-க்கும்மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டிருந்தனர்.