Published : 30 Aug 2023 06:10 AM
Last Updated : 30 Aug 2023 06:10 AM

துணை மேயர் மகேஷ்குமார் உட்பட 6 பேர் மீது மோசடி வழக்கு: நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் நடவடிக்கை

சென்னை: சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் உட்பட 6 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்துள்ளனர். சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் (42).

இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருந்ததாவது: எனது கணவர் மோகன், 2021-ம் ஆண்டில் உடல் நலக்குறைவால் காலமாகி விட்டார். அவர் உயிருடன் இருந்த காலத்தில், அவரது நெருங்கிய நண்பர்களான தற்போதைய சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், கூட்டுறவுத் துறை அமைச்சராக இருக்கும் பெரிய கருப்பனின் மருமகன் குணசேகரன், செல்வராஜன், பாலமுருகன் மற்றும் திவாகர் ஆகியோருடன் சேர்ந்து தனியார் நிறுவனம் ஒன்றை 2014-ல் தொடங்கினார். அனைவரும் பங்குதாரர்களாகி அதை தென்சென்னை மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தனர்.

இந்நிலையில், எனது கணவர் காலமாகி விட்டதை தங்களுக்கு சாதகமாக்கி, அவருக்குரிய பங்கை மோசடி செய்துவிட்டனர். கணவரின் வாரிசுதாரர் என்ற அடிப்படையில் எனக்கும், எனது மகளுக்கும் பங்கு தரவில்லை. கூட்டு சதி செய்து, போலி கணக்குகளை ஏற்படுத்தி மோசடி செய்துவிட்டனர். எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு புகாரில் தெரிவித்திருந்தார். புகார் மீது போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, நீதிமன்றத்தில் இசக்கியம்மாள் வழக்கு தொடர்ந்தார். தற்போது நீதிமன்ற உத்தரவுப்படி துணை மேயர் மகேஷ்குமார் உள்ளிட்ட 6 பேர் மீதும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் மோசடி உட்பட 6 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x