

செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் ரோந்து பணி தொடங்கியது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரணீத் தொடங்கி வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாரய உயிரிழப்பு சம்பவங்களைத் தொடர்ந்து போலீஸார் தரப்பில் பல்வேறு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதுதவிர புதுச்சேரியில் இருந்து மதுபானங்கள் கடத்தப்படுவதையும் கட்டுப்படுத்தவும் போலீஸார் உஷார் படுத்தப்பட்டனர். இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட காவல் துறை நிர்வாகம் மேற்கொண்டது.
இதன் ஒருபகுதியாக தற்போது செங்கல்பட்டு நகர காவல் நிலையம் மற்றும் செங்கல்பட்டு தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரவுடிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்களை தடுப்பதுடன் குற்ற சம்பவங்களே நடைபெறாமல் இருக்கவும் பல்வேறுநடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளன.
இதன்படி, செங்கல்பட்டு நகரம் மற்றும் அதனையொட்டிய பகுதிகளில் ரோந்து பணியை தீவிரப்படுத்தவும் மாவட்ட காவல் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்ஒரு பகுதியாக துப்பாக்கி ஏந்திய போலீஸாரை ரோந்து பணியில் ஈடுபடுத்தவும் திட்டமிடப்பட்டது. இதற்காக சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீஸார் இருசக்கர வாகனங்களில் ரோந்து பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி இந்த ரோந்து பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்பிரணீத் நேற்று முன்தினம் இரவு செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் தொடங்கிவைத்தார். மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸாரின் கண்காணிப்பு பணிகள்மூலம் ஏற்படும் பல்வேறு மாற்றங்களை கருத்தில்கொண்டு, படிப்படியாக பிற நகரப்பகுதிகளிலும் ரோந்து பணிகளை மேற்கொள் ளவும் திட்டமிட்டுள்ளதாக மாவட்ட காவல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.