Published : 30 Aug 2023 06:15 AM
Last Updated : 30 Aug 2023 06:15 AM

ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.112 கோடியில் தீவிர சிகிச்சை பிரிவு கட்டிடம் விரைவில் கட்டப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.112 கோடி மதிப்பீட்டில் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிடம் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் விரைவில் கட்டப்பட உள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு மருத்துவ வசதிகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தார். இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ராயபுரம் தொகுதி எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சாந்திமலர், அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பாலாஜி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது: சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.30 லட்சம் செலவில்உணர்திறன் மற்றும் செயல்திறன் மேம்பாட்டு பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிந்தனையை ஒருமுகப்படுத்துதல், ஐம்புலன் உணர்வுகளை மேம்படுத்துதல், அறிவாற்றலை தூண்டுதல், மூளை செயல்பாட்டை அதிகரித்தல், விழிப்புணர்வை அதிகரித்தல், தசை வளர்ச்சி இயக்கம் மேம்படுத்துதல் போன்ற பல்வேறு பயன்கள் கிடைக்கும்.

இன்னிசை குழாய்கள்: இந்த பூங்காவில் ஊஞ்சல், ரங்கராட்டினம், ஏற்று பலகை, வலையேறுதல் போன்ற வசதிகளும், தொடுபுலன் உணர்ச்சி மேம்பட பயிற்சி பாதை, நீர் சால் புலன் பயிற்சி, கூழாங்கற்கள், மணற்பரப்பு பயிற்சி, வண்ண நீரூற்றுகள், இன்னிசை குழாய்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள்உள்ளன. ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இந்த பூங்கா பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்.

ஸ்டான்லி மருத்துவமனையில் ரூ.112 கோடி மதிப்பீட்டில் தீவிரசிகிச்சைப் பிரிவு கட்டிடம் தரைத்தளம் மற்றும் 6 தளங்களுடன் விரைவில் கட்டப்பட உள்ளது. செவிலியர் பயிற்சிப் பள்ளி மாணவிகளுக்கான விடுதி கட்டும் பணி ரூ.7 கோடியில் தொடங்கப்பட உள்ளது.

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1,021 மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். இதனிடையே, தற்போது மேலும் 1,000 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அவற்றையும் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். 983 மருந்தாளுநர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கும் தேர்வு முறை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

3,000 பேருக்கு பணி ஆணை: இன்னும் சில மாதங்களில் 3,000-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களுக்கு பணிஆணைகளை முதல்வர் வழங்கஉள்ளார். இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x