விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து செப்.6-ல் ஆர்ப்பாட்டம்

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கண்டித்து செப்.6-ல் ஆர்ப்பாட்டம்
Updated on
1 min read

சென்னை: சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் அனைத்துக் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. திக தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்ற இந்தக்கூட்டத்தில், திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, விசிக தலைவர்திருமாவளவன், இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மதிமுக அமைப்புச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ்,மனித நேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது எம்எல்ஏ பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள் வருமாறு: விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் பரம்பரை பரம்பரையாக செய்துவந்த ஜாதி தொழிலை ஊக்குவிக்கும் குலக்கல்வி திட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ளது. இதில் 8 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம் என்பது, தந்தை தொழிலை மகன் செய்வதற்கான சூழ்ச்சியாகும். மேலும், மாணவர்களின் உயர்கல்வியைத் தடுக்கும்.

குலக்கல்வித் திட்டத்தின் மறுவடிவமான விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எதிர்த்து, இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் முதல்கட்டமாக அனைத்து சமூகநீதிக் கொள்கைசார்ந்த கட்சிகளும் ஒருங்கிணைந்து மாபெரும் ஆர்ப்பாட்டத்தை செப். 6-ம் தேதி சென்னையில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in