Published : 30 Aug 2023 04:02 AM
Last Updated : 30 Aug 2023 04:02 AM
திருப்புவனம்: மத்திய அரசின் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிடுமாறு நாடாளுமன்றத்தில் பேசுவேன் என கனிமொழி எம்பி தெரிவித்தார்.
திருப்புவனம் அருகே கீழடி அகழ் வைப்பகத்தில் நேற்றிரவு நாடாளுமன்ற ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் நிலைக்குழு தலைவர் கனி மொழி எம்பி தலைமையில் உறுப்பினர்களும், எம்.பி.க்களுமான சின்ராஜ், நரேந்திர குமார், தலாரி ரங்கையா, கீதா பென் வஜெசிங் பாய், முகமது அப்துல்லா, ராண்ணா கடாடி, அஜய் பிரதாப் சிங் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது பலத்த மழை பெய்ததால் அகழ் வைப்பகத்தில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் ஆங்காங்கே தேங்கி கிடந்தது. எனினும் எம்பிக்கள் அகழ்வைப்பகத்தை முழுவதும் பார்வையிட்டனர். அவர்களுக்கு தொல்பொருட்கள், அகழாய்வு குறித்து தொல்லியல் துறையினர் விளக்கினர்.
பின்னர் கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடியில் அகழாய்வு செய்ததே நீண்டபோராட்டமாக இருந்தது. இங்கு அகழ் வைப்பகம் அமைத்த முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். எம்பிக்கள் கீழடிக்கு வந்தது மறக்க முடியாத அனுபவம் என்றனர். மத்திய அரசின் கீழடி அகழாய்வு முடிவுகளை வெளியிட நாடாளுமன்றத்தில் பேசுவேன். முதல்வரிடம் பேசி பெங்களூருவில் உள்ள தொல்பொருட்களை கீழடிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT