

தஞ்சாவூர்: நெல் சாகுபடிக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்த ஊக்கத் தொகை என்பது சொற்பளவில் உள்ளதால் அதை உயர்த்தி வழங்க வேண்டும் என அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசு, நடப்பு காரீப் பருவத்துக்குக் குறைந்த பட்ச ஆதார விலையாக் சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2183-ம், சன்ன ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2203-ம் என விலை நிர்ணயித்துள்ளது. இந்நிலையில், நெல் சாகுபடிப் பணியில் விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக, தமிழக அரசு நடப்பு கொள்முதல் பருவத்துக்கான சாதாரண நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.82 உயர்த்தி ரூ.2,265-ம், சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.107 உயர்த்தி ரூ.2,310-ம் தற்போது அறிவித்துள்ளது.
ஆனால், சாதாரண மற்றும் சன்ன ரக நெல்லுக்கு கடந்த ஆண்டு அரசு முறையே ரூ.75, ரூ.100 ஊக்கத் தொகை அறிவித்திருந்த நிலையில், தற்போது வெறும் ரூ.7 மட்டும் சேர்த்து அறிவித்துள்ளது ஏமாற்றமளிப்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழக அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து, ஊக்கத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் காவிரி டெல்டா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மேல உளூர் பா.ஜெகதீசன்: உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் விலையும், தொழிலாளர்களின் கூலியும் உயர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் கொள்முதல் விலை மட்டும் உயராமல் இருப்பதால் விவசாயிகளுக்கு முதல்வரின் அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. எனவே, விலை உயர்வை மறுபரிசீலனை செய்து உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தஞ்சாவூர் மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன்: நெல் குவிண்டாலுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழக அரசு நெல்லுக்கான ஊக்கத் தொகையை குவிண்டாலுக்கு ரூ.7 மட்டுமே உயர்த்தி வழங்குவது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
நாட்டில் மற்ற பொருட்கள் எல்லாம் விலை உயர்ந்து கொண்டே செல்லும்போது, உணவுப்பொருள்களின் மூல ஆதரமாக திகழும் நெல்லுக்கு மட்டும் விலையை உயர்த்துவதில் பாரபட்சம் காட்டுவது ஏன்?. எனவே தமிழக முதல்வர் ஊக்கத் தொகையை மறுபரிசீலனை செய்து விலையை உயர்த்தி அறிவிக்க வேண்டும்.
தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கச் செயலாளர் சுந்தர.விமலநாதன்: மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதார விலையைப் போன்று தமிழக அரசின் அறிவிப்பும் விவசாயிகளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின் போது, நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்குவோம் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.
எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்த விலை அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் விவசாயிகள் தங்களுடைய அதிருப்தியை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வெளிப்படுத்துவார்கள் என்றார்.