Last Updated : 11 Dec, 2017 05:27 PM

 

Published : 11 Dec 2017 05:27 PM
Last Updated : 11 Dec 2017 05:27 PM

சிறுமி சரிகா மரணத்துக்கு உறுப்பு தானத்தின் நடைமுறை சிக்கலே காரணம்: டாக்டர் ரவீந்திரநாத்

மேல் சிகிச்சைக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததால் வழியிலேயே 15 வயது சிறுமி சரிகா உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிறுமி சரிகா, இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை), சரிகாவின் உடல் நிலை மோசமானதை அடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

இதனிடையே, அவரை அழைத்துச்செல்ல மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ்வர 7 மணி நேரம் தாமதமானது. மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த பின்னரே, ஆம்புலன்ஸ் வந்து சேர்ந்தது என்று கூறப்பட்டது. ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் போரூர் அருகே மாணவி சரிகாவின் உயிர் பிரிந்தது.

இது குறித்து, சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜி.ரவீந்திரநாத் 'தி இந்து' தமிழ் இணையதளத்திற்கு அளித்த பேட்டி:

"அரசு ஆம்புலன்ஸ் சேவையில் நிறைய பிரச்சினைகள் உள்ளன, பொதுவாக 108 ஆம்புலன்ஸ் சேவை, அழைத்த 6 நிமிடத்திற்குள் வர வேண்டும். ஏழு மணி நேர தாமதம் என்பது மிகமிக அதிகம். இந்த சம்பவத்திற்கு சமந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

108 ஆம்புலன்ஸ் சேவை தனியார்மயமாக உள்ளது. அதை அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவர ஏற்பாடு செய்ய வேண்டும். இந்தச் சம்பவம் உண்மையாக இருந்தால், அந்த நிறுவனத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு மருத்துவமனையில் இருந்து வேறொரு மருத்துவமனை செல்லத் தனியாக ஆம்புலன்ஸ் வசதியை ஏற்பாடு செய்ய வேண்டும். மாவட்ட எல்லை பிரச்சினைகளாலும் இது போன்ற அலட்சிய நிகழ்வுகள் நடக்கின்றன.

மத்திய அரசு மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த துறைகளைப் படிப்படியாக தனியார் மயமாக்கி வருகிறது. இதனால் மருத்துவமனைகள் ஒருங்கிணைந்து செயல்பட முடியாமல் போகக்கூடும்.

பொதுவாக, உடல் உறுப்பு தானம் செய்பவர்களில் அதிகம் பேர் ஏழைகள். ஆனால், பணக்காரர்களுக்கே உடல் உறுப்புகள் எளிதில் கிடைக்கின்றன. எல்லா மாவட்ட மருத்துவமனைகளிலும் மூளைச் சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைப் பெற மாவட்டந்தோறும் உடல் உறுப்பு தான மையத்தை உருவாக்க வேண்டும்.”

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x