Published : 06 Dec 2017 10:33 AM
Last Updated : 06 Dec 2017 10:33 AM

வயிற்றில் பெருந்தமனி வீங்கி வெடித்ததால் உயிருக்கு போராடிய கூலித் தொழிலாளிக்கு 6 மணி நேர அறுவை சிகிச்சை: அரசு ஸ்டான்லி மருத்துவமனை டாக்டர்கள் சாதனை

வயிற்றில் பெருந்தமனி வீங்கி வெடித்ததால் உயிருக்கு ஆபத் தான நிலையில் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கூலித் தொழிலாளிக்கு 6 மணி நேரம் அறுவைச் சிகிச்சை செய்து டாக்டர்கள் காப்பாற்றினர்.

தஞ்சாவூர் மாவட்டம் விளார் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (52). சலூனில் கூலித் தொழிலாளியாக உள்ளார். கடந்த மாதம் வயிறு மற்றும் முதுகு வலி ஏற்பட்டதால் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், அவரது இதயத்தில் இருந்து செல்லும் பெருந்தமனி (ரத்தக்குழாய்) வயிற்றுப் பகுதியில் வீங்கி வெடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் வரை செலவாகும் என்று டாக்டர்கள் சொன்னதால், அவர் உடனடியாக சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

ரத்தநாள அறுவைச் சிகிச்சைத் துறை பேராசிரியர்கள் க.துளசிகுமார், க.இளஞ்சேரலாதன், மயக்கவியல் பேராசிரியர் குமுதா மற்றும் டாக்டர்கள் சி.சண்முகவேலாயுதம், பா.தீபன்குமார், வாணி ஆகியோர் கொண்ட குழுவினர் வயிற்றுப் பகுதியில் அறுவைச் சிகிச்சை செய்து வெடித்த ரத்தக்குழாய் மற்றும் உறைந்த ரத்தக் கட்டிகளை அகற்றினர். பின்னர் செயற்கை ரத்தக்குழாயை பொருத்தினர். இதைத்தொடர்ந்து நேற்று மருத்துவமனையில் நடந்த நிகழ்ச்சியில் அறுவைச் சிகிச்சையை வெற்றிகரமாக செய்த டாக்டர்கள் குழுவினரை மருத்துவமனை டீன் பொன்னம் பல நமச்சிவாயம் பாராட்டினார். அப் போது மருத்துவமனை ஆர்எம்ஓ ரமேஷ் உடன் இருந்தார்.

இந்த அறுவைச் சிகிச்சை தொடர்பாக டாக்டர் க.இளஞ்சேரலாதன் கூறியதாவது:

காலை 9 மணிக்கு தொடங்கிய அறுவைச் சிகிச்சை பிற்பகல் 3 மணிவரை நடைபெற்றது. வழக்கமாக வயிற்றில் பெருந்தமனி 1.5 செமீ முதல் 2 செமீ வரை இருக்கும். ஆனால், இவருக்கு 7 செமீ அளவுக்கு வீங்கி வெடித்திருந்தது. வெடித்த 9 செமீ அளவுள்ள பெருந்தமனி அகற்றப்பட்டு, செயற்கை ரத்தக்குழாய் பொருத்தப்பட்டது.

பொதுவாக பெருந்தமனி வெடித்தால் 99 சதவீதம் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. சரியான நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், இவர் உயிர் பிழைத்தார். தனியார் மருத்துவமனையில் இந்த அறுவைச் சிகிச்சைக்கு ரூ.8 லட்சம் வரை செலவாகும். இங்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. ரத்த அழுத்தம், கொழுப்பு, புகை பிடிப்பது போன்றவைகளால் பெருந்தமணி வீங்கி வெடிக்க அதிக வாய்ப்புள்ளது.

இவ்வாறு டாக்டர் க.இளஞ்சேரலாதன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x