பேரவையில் திமுகவினர் இருப்பது ஆளுங்கட்சியினருக்கு பிடிக்கவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி

பேரவையில் திமுகவினர் இருப்பது ஆளுங்கட்சியினருக்கு பிடிக்கவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
Updated on
1 min read

சட்டப்பேரவையில் திமுக உறுப் பினர்கள் இருப்பது ஆளுங் கட்சியினருக்கு பிடிக்கவில்லை. அதனால், திட்டமிட்டே எங்களை வெளியேற்றுகின்றனர் என்று சட்டமன்ற திமுக கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

சட்டப்பேரவையில் இருந்து திமுக உறுப்பினர்கள் செவ்வாய்க் கிழமை கூண்டோடு வெளியேற் றப்பட்டனர். பேரவைக்கு வெளியே நிருபர்களிடம் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:

தமிழகத்தின் சில பகுதிகளில் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தில் எங்கள் கட்சி உறுப்பினர் எ.வ. வேலு பேசும்போது, அரசுக்கு பல கோரிக்கைகளை வைத்தார். அவரை தொடர்ந்து பேசவிடாமல் பேரவைத் தலைவர் தடுத்து விட்டார்.

தொடர்ந்து பதிலளித்த அமைச்சர், சுனாமி ஏற்பட்டபோது திமுகவினர் ஓடி ஒளிந்து கொண்டனர், மருத்துவமனையில் போய் படுத்துக்கொண்டனர் என ஏற்கெனவே கூறிய அபாண்டமான குற்றச்சாட்டை மீண்டும் கூறினார். நாங்கள் எழுந்து ‘அதற்கும், இதற்கும் என்ன சம்பந்தம்’ என்று கேட்டோம். சுனாமி ஏற்பட்டபோது தமிழகத்தில் அதிமுக ஆட்சிதான் நடந்தது.

ஆனால், வேண்டுமென்றே எங்களை கோபப்படுத்த வேண்டும், அவையிலே பிரச்சினையை எழுப்பி வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அமைச்சர் பேசினார்.

இந்த அவைக்கு திமுக உறுப்பினர்கள் வருவது அமைச்சர்களுக்கும், ஆளுங்கட்சியினருக்கும் பிடிக்கவில்லை, முதல்வருக்கும் பிடிக்கவில்லை.

குறிப்பாக பேரவைத் தலைவருக்கு பிடிக்கவில்லை. அதனால் திட்டமிட்டு, எங்களை வெளியேற்றுவதிலேயே குறியாக உள்ளனர். அந்தப் பணியை செய்துவரும் பேரவைத் தலைவரின் சர்வாதிகாரப் போக்கைக் கண்டிக்கிறோம்.

இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in