

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை-கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வார நாட்களில் முதல் நாளான நேற்று சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் சேவை இல்லாததால், பயணிகள் கடும் சிரமத்தை சந்திக்கின்றனர்.
எனவே, தினசரி காலை, மாலையின் நெரிசல் மிகுந்த நேரங்களில் கூடுதல் ரயில் சேவை இயக்க பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னை எழும்பூர்-கடற்கரை இடையேயான 4-வது பாதை சுமார் ரூ.280 கோடி மதிப்பில் 4 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட உள்ளது. இப்பணி காரணமாக, சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை
இடையே ரயில் சேவை நேற்று முன்தினம் முதல் (ஆக.27) ரத்து செய்யப்பட்டது. அடுத்த 7 மாதத்துக்கு சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே மட்டுமே மின்சார ரயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், வார நாட்களில் முதல்நாளான நேற்று, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதியது.
அலுவலகத்துக்கு செல்வோர், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் என பலதரப்பினர் குவிந்தனர். நெரிசல் மிகுந்த நேரங்களில் 25 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டதால், பயணிகள் மிகுந்த சிரமத்தை சந்தித்தனர்.
கடற்கரை-வேளச்சேரி இடையே 122 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், தற்போது 80 சேவைகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதுபோல கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரயில் சேவைகள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், பயணிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.
நெருக்கடியில் சிக்கி தவிப்பு: இதுகுறித்து ரயில் பயணிகள் கோவிந்தராஜ், விமல் ஆகியோர் கூறியதாவது: புதிய பாதை அமைப்பதற்காக பணிகள் நடைபெறுவதை வரவேற்கிறோம். அதேநேரத்தில், பயணிகளுக்கு சிரமம் இன்றி வழக்கம்போல ரயில் சேவை வழங்கப்பட வேண்டும்.
காலை, மாலையில் நெரிசல் நேரங்களில் 10 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்பட்டது. ஆனால், இப்போது, 25 நிமிடத்துக்கு ஒரு ரயில் இயக்கப்படுகிறது. இதனால், கூட்டநெரிசலில் சிக்கி, நாங்கள் மிகுந்த சிரமத்தை சந்திக்கிறோம். எனவே, 10 நிமிடத்துக்கு ஒரு மின்சார ரயில் இயக்க வேண்டும். இது குறித்து ரயில்வே நிர்வாகம் பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூடுதலாக இயக்க முடியாத நிலை: இதுகுறித்து சென்னை கோட்ட ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: ரயில் சேவையில் மாற்றம் தொடர்பாக அறிவிப்பு பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் வசதிக்காக, சிந்தாதிரிபேட்டை ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலமாக, அறிவிப்பு செய்யப்படுகிறது.
சிந்தாதிரிப்பேட்டையில் முன்பு ஒரு டிக்கெட் கவுன்ட்டர் இருந்தது. தற்போது, கூடுதலாக 2 டிக்கெட் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. இரண்டு நகரும் படிக்கட்டுகள் இயங்குகின்றன. மேலும், பழுதடைந்த மின்தூக்கிகள் சரிசெய்யும் பணி நடைபெறுகிறது.
வேளச்சேரியில் இருந்து புறப்படும் மின்சார ரயில் சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் பிரதான பாதையில் நிறுத்தப்படும். அதேநேரத்தில், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து புறப்படும் ரயில் சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் லுப் பாதையில் (கிளை பாதை) மாற்றப்பட்டு, அங்கிருந்து வேளச்சேரி நோக்கிச் செல்லும். அதன்பிறகு, சேப்பாக்கத்தில் நிற்கும் ரயில் அதே பாதையில் சிந்தாதிரிப்பேட்டை நிலையத்துக்கு வந்தடையும்.
ரயிலை லூப் பாதையில் மாற்றி விடுவதற்கு 20 நிமிடம் ஆகும். இதனால், நெரிசல் நேரங்களில் கூடுதல் சேவை வழங்க முடியாத நிலை உள்ளது. நெரிசல் நேரங்களில் கூடுதல் ரயில் சேவை இயக்க வேண்டும் என நிறைய பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கோரிக்கை உயரதிகாரிகளின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.