Published : 29 Aug 2023 04:32 AM
Last Updated : 29 Aug 2023 04:32 AM

காவலர் எழுத்து தேர்வு முடிவு ஒரு மாதத்தில் வெளியிடப்படும்: டிஜிபி சங்கர் ஜிவால் தகவல்

கோப்புப்படம்

சென்னை: தமிழகக் காவல் துறையில் 750 காலி பணியிடங்களை நிரப்ப அண்மையில் நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவுகள் ஒரு மாதத்தில் வெளியிடப்படும் என டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: காவல் துறை சார்பு ஆய்வாளர்கள் (எஸ்ஐ) மற்றும் நிலைய அதிகாரிகள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான ஒருங்கிணைந்த தேர்வுக்கு மொத்தம் 1 லட்சத்து 86 ஆயிரத்து 722 (ஆண்கள் - 1,45,804, பெண்கள் - 40,885 மற்றும் திருநங்கைகள் 33) பேர் விண்ணப்பித்திருந்தனர். பொது விண்ணப்பதாரர்களுக்கான முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் தமிழ்மொழி தகுதித் தேர்வு 33 மாவட்ட மற்றும் மாநகர மையங்களில் கடந்த 26-ம் தேதி நடைபெற்றது. மறுநாள், காவல் துறை மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கான துறை தேர்வு 12 மையங்களில் நடைபெற்றது.

எழுத்துத் தேர்வு முடிவுகள் ஒரு மாத காலத்துக்குள் வெளியிடப் படவுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அடுத்தக்கட்ட தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இவ்வாறு டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

காவலர், தீயணைப்பாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்: இதனிடையே இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் பதவிகளுக் கான தேர்வுக்கு செப்.19-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் மூலமாக 2-ம் நிலை காவலர் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்புக் காவல்படை), 2-ம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான பொதுத் தேர்வு 2023-ம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 10-ம்வகுப்பு அல்லது அதற்கு சமமான கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் செப்.19-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x