Published : 16 Dec 2017 08:48 AM
Last Updated : 16 Dec 2017 08:48 AM

ஆர்.கே.நகர் தேர்தலுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தம்: போலீஸ் பாதுகாப்புடன் தனி அறையில் வைக்கப்பட்டன

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்கள் பொருத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தனி அறையில் நேற்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

ஆர்.கே.நகர் தொகுதியில் மொத்தம் 258 வாக்குச் சாவடிகள் உள்ளன. இதற்காக 360 மின்னணு கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 1300 வாக்குப் பதிவு செய்யும் இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் 360 விவிபாட் இயந்திரங்கள் ஆகியவை தயார்நிலையில் உள்ளன. இதில் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் வரிசை எண், பெயர்கள், சின்னங்கள், புகைப்படங்கள் ஆகியவை அச்சிடப்பட்ட தாள்களை பொருத்தும் பணி புதுவண்ணாரப்பேட்டையில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அலுவலர் தா.கார்த்திகேயன், தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன் பி.நாயர், மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் ஆகியோர் இப்பணியை பார்வையிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் தா.கார்த்திகேயன் கூறும்போது, “தேர்தல் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 107 குழுக்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றன. தொகுதி முழுவதும் 85 இடங்களில் 225 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் காட்சிகள் தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அதில் இதுவரை பணம் கொடுப்பது போன்றோ, பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்றோ காட்சிகள் பதிவாகவில்லை” என்றார்.

சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் கூறும்போது, “தேர்தல் விதிமீறல் தொடர்பாக இதுவரை 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாரை ஒருங்கிணைக்க ஒயர்லெஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. புகார் வந்தால் அதிகபட்சம் 5 நிமிடங்களுக்குள் சம்மந்தப்பட்ட இடத்துக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 2 ஆயிரம் போலீஸார், 5 துணை ராணுவப் படையினர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் 6 கம்பெனி துணை ராணுவப் படையினர் கூடுதலாக வந்துள்ளனர்” என்றார்.

4 வாக்குப்பதிவு இயந்திரங்கள்

59 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், இந்த தேர்தலில் ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 4 வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட உள்ளன. இவை அனைத்தும் ஒரு கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைக்கப்படும். அதனுடன் யாருக்கு வாக்களித்தோம் என்பதை காட்டும் விவிபாட் இயந்திரமும் இணைக்கப்படும்.

வாக்குப் பதிவு இயந்திரத்தில் தேசிய கட்சிகளின் அகர வரிசைப்படி முதல் சின்னமாக பகுஜன் சமாஜ் கட்சியின் யானை சின்னம் இடம்பெற்றுள்ளது. 2-வதாக பாஜகவின் தாமரைச் சின்னம், 3-வதாக அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம், 4-வதாக திமுகவின் உதயசூரியன் சின்னம் இடம்பெற்றுள்ளது. தினகரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள குக்கர் சின்னம் 33-வது இடத்தில் இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x