

சென்னை: பாமகவினர் தங்களின் மனக்குறைகளை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தக் கூடாது. சமூக ஊடகங்களை ஆக்கப்பூர்வ நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கட்சியின ருக்கு அவர் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பாமகவில் குழுக்களோ, குழுமோதல்களோ இருந்தது கிடையாது. ஆனால், இப்போது அங்கொன்றும், இங்கொன்றுமாக அவை எட்டிப்பார்க்கத் தொடங்கியுள்ளன. அவை புற்றுநோயைவிட மோசமானவை. அவற்றை நான்ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்.
கூர்மையான கத்தி போன்றது: கட்சிக்குள் குழு மோதல் உடனே ஒழிக்கப்பட வேண்டும். சமூக ஊடகங்களைக் கையாள்வதில் மிகவும்கவனமாக இருக்க வேண்டும். சமூகஊடகங்கள் மிகவும் வலிமையானவை என்பதில் மாற்றுக் கருத் துக்கு இடமில்லை. அதே நேரம்,கூர்மையான கத்திக்கு இணையான வலிமை கொண்ட சமூக ஊடகங்களை நாம் ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருபோதும் எதிர்மறையாக பயன்படுத்தக் கூடாது.
சமூக ஊடகங்களில் நம்மைப் பிடிக்காதவர்கள், நம்மைப் பற்றி தவறாகவும், தரக்குறைவாகவும் பதிவிடலாம். தனிப்பட்ட முறையில்கூட நம்மில் சிலருக்கு எதிராகஎவரேனும் பதிவிடக் கூடும். அத்தகைய தருணத்தில், மிகவும்நாகரிகமான முறையில், எதிர்த் தரப்பினருக்கு உண்மை நிலையை விளக்கி, சம்பந்தப்பட்ட பதிவுகளை நீக்கச் செய்ய வேண்டும். அதை விடுத்து, பதிலுக்கு பதில் என்பதுபோன்ற நாகரிகமற்ற செயல்களில் பாமகவினர் ஒருபோதும் ஈடுபடக்கூடாது.
அதேபோல, பாமகவினரின் மனக்குறைகளை கட்சியின் அமைப்பு சார்ந்த கூட்டங்களில் பேசித் தீர்வுகாண வேண்டுமே தவிர, அவற்றை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்தக் கூடாது. சமூக ஊடகங்களை கட்சியின் வளர்ச்சிக்காக மட்டுமே, ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்த வேண்டும். அதன்மூலம் நமது இலக்கை அடைவதற்கான முயற்சிகளில் அனைவரும் பங்களிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரி வித்துள்ளார்.