

நாகர்கோவில்/தென்காசி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் 700 டன் பூக்கள் விற்பனையாயின. கேரள மாநிலத்தின் முக்கியப் பண்டிகையான ஓணம் இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக, கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை மலர் சந்தையில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய பூக்கள் வியாபாரம் மும்முரமாக நடைபெற்றது. உள்ளூர் மட்டுமின்றி மதுரை, திருநெல்வேலி, ஓசூர், திண்டுக்கல், சத்தியமங்கலம், பெங்களூரு, கிருஷ்ணகிரி, உதகை பகுதிகளில் இருந்தும் அதிகமான பூக்களை வியாபாரிகள் கொள்முதல் செய்திருந்தனர்.
ஓணம் நாளின் புகழ்பெற்ற அத்தப்பூ கோலத்துக்கு பயன்படுத்தப்படும் மஞ்சள், காவி கிரேந்தி, வாடாமல்லி, கோழிக்கொண்டை, கொழுந்து, ரோஜா உள்ளிட்ட மலர்கள் அதிகம் கொள்முதல் செய்யப்பட்டிருந்தன. நேற்று மட்டும் 700 டன் பூக்கள் விற்றுத் தீர்ந்தன.
இதுகுறித்து தோவாளை மலர் சந்தை மொத்த வியாபாரிகள் கூறும்போது, “தற்போது பூக்கள் மகசூல் அதிகமாக உள்ளதால், ஒரு கிலோ மல்லிகை ரூ.500-க்கும், பிச்சி ரூ.600-க்கும் விற்பனையானது. கிரேந்தி ரூ.100, கோழிக்கொண்டை ரூ.100, வாடாமல்லி ரூ.110, அரளி ரூ.300, ரோஜா ரூ.200, துளசி ரூ.40, தாமரை ஒன்று ரூ.7 என விற்பனையானது. கேரளத்தின் பல்வேறு நகரங்களுக்கும் வாகனங்களில் பூக்களை அனுப்பி வைத்தோம்” என்றனர்.
ஓணத்தில் முக்கிய பங்காற்றும் நேந்திரம், செவ்வாழை, மட்டி வாழைத்தார்களுக்கு தட்டுப்பாடு நிலவியது. கடும் வெயிலால் வாழை மகசூல் பாதியாக குறைந்துள்ளது. இதனால் 800 ரூபாய்க்கு விற்ற வாழைத்தார்கள் நேற்று ரூ.1,500 வரை விலைபோனது. மட்டி வாழைக்காய் கிலோ ரூ.150 வரை விற்பனையானது. இதுபோல் தென்காசி சந்தைக்கு ஏராளமான கேரள வியாபாரிகள் வந்து பூக்களை கொள்முதல் செய்தனர்.