

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை மேம்படுத்தப்பட்ட அரசுஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று முன்தினம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சரியான நேரத்தில் பணியில் இல்லாத மருத்துவர், மருந்தாளுநர் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் அனைவர் மீதும் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். சுகாதாரத் துறை அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு அரசு மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு மருத்துவஅலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மு.அகிலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்தில் 5 மருத்துவர் பணியிடங்களில் 4 இடங்கள் காலியாகவுள்ளன.
மற்றொருவர் வட்டார மருத்துவ அலுவலராக இருக்கிறார். அங்கு களப்பணி புரியும் 3மருத்துவர்களும் மாற்றுப்பணி மருத்துவர்களாவர். திங்கள் முதல்சனிக்கிழமை வரை வழக்கமான பணிகளைச் செய்யும் அந்த மருத்துவர், வார இறுதிநாளில் இரவு பணியைச் செய்து வருகிறார்.
அந்த மருத்துவருக்கு வாரஓய்வு வழங்கப்படாமல் ஞாயிற்றுக்கிழமையும் பணிபுரிய உத்தரவிட்டதோடு, இரவு பணிபுரிந்த மருத்துவர் மீது சில நிமிட தாமதத்துக்காக நடவடிக்கை எடுப்பது மருத்துவருக்கு இழைக்கப்படும் அநீதியாகும். 2,000 மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கடும் பணிச்சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
மன உளைச்சலில் இருக்கும் மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மருத்துவர்களின் ஊக்கத்தைக் குலைத்து வேலையை வெறுக்கும் நிலைக்கு தள்ளக்கூடும். எனவே, மருத்துவர்கள் மீதான நடவடிக்கையை கைவிட்டு, மருத்துவர்கள் பற்றாக்குறைக்குத் தீர்வு காண வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.