

சென்னை: ஆட்டோ மீட்டர் கட்டணம் விரைவில் அறிவிக்கப்படும் என ஓட்டுநர்களிடம் உள்துறை செயலாளர் உறுதி அளித்துள்ளார். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தவும், ஆட்டோ செயலியைத் தொடங்கவும் கோரிசென்னை தலைமைச் செயலகத்தில் உள்துறை செயலாளர் பி.அமுதாவை, தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் செயல் தலைவர் எஸ்.பாலசுப்பிரமணியம், ஆட்டோடாக்சி தொழிலாளர் சங்க மத்தியசென்னை மாவட்ட தலைவர் ஆர்.கபாலி ஆகியோர் நேற்று சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ``ஓலா, ஊபர்,பைக் டாக்சி போன்றவற்றால், ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. கடந்த அதிமுக ஆட்சியில்ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றிஅமைக்கப்பட்டது. 1.8 கி.மீ குறைந்தபட்ச தூரமாகக் கணக்கிட்டு ரூ.25-ம், அதற்கடுத்த ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.12எனவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது.
ஓட்டுநர்களுக்கான செயலி: அக்கட்டணம் விலைவாசி உயர்வுக்கு ஏற்ப அமைக்கப்படவில்லை. 8 ஆண்டுகளாக ஆட்டோ மீட்டர் கட்டணம் மாற்றி உயர்த்தப்படாமல் இருப்பதால், விலைவாசி உயர்வுக்கு ஏற்பஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி அமைக்க வேண்டும்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது, மனுவைப் பெற்றுக்கொண்ட உள்துறை செயலாளர் அமுதா, ``வாடகை வாகன ஓட்டுநர்களுக்கான செயலி தொழிலாளர் நலத்துறை சார்பில் தயாரிக்கப்பட்டு வருகிறது. தையல், கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளிட்ட சிறு தொழில்களோடு ஆட்டோ ஓட்டுநர்களும் பயன்பெறும் வகையில், அந்த செயலி உருவாக்கப்படும்.
மேலும், இது தொடர்பாகத் தொழிலாளர் நலத் துறையிடமும், முதல்வரிடமும் கலந்துஆலோசித்து விரைவில் தெரிவிக்கிறேன். அதேபோல், ஆட்டோ மீட்டர் கட்டணம் உயர்த்துவது சம்பந்தமாக நானே நேரடியாகத் தலையீட்டு முதல்வரிடம் கலந்து பேசி விரைவில் அறிவிக்கிறேன்'' என்றார்.