

சென்னை: ஆவடியில் நடைபெற்ற மத்திய அரசின் ‘ரோஜ்கார் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழாவில், 362 பேருக்கு பணி நியமன ஆணைகளை மத்திய இணையமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
நாட்டில் இளைஞர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பை வழங்குவதற்காக ‘ரோஜ்கார் மேளா’ என்ற வேலைவாய்ப்பு திருவிழாவை மத்திய அரசு நடத்தி வருகிறது. இதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை வழங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தி வருகிறது.
5 லட்சம் இளைஞர்கள்: இத்திட்டத்தின் கீழ், இதுவரை நாடு முழுவதும் 5 லட்சம் இளைஞர்கள் மத்திய அரசு துறைகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளனர்.
இந்நிலையில், தற்போது 8-ம் கட்டமாக வேலைவாய்ப்பு திருவிழா நேற்று நடைபெற்றது. சென்னையை அடுத்த ஆவடியில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை மையத்தில் (சிஆர்பிஎப்) நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி பங்கேற்றார்.
விழாவில், மத்திய ரிசர்வ் காவல் படையில் 273 பேருக்கும், மத்திய ஆயுத காவல் படையில் (சசாஸ்த்ரா சீமா பால்) 21 பேருக்கும், எல்லை பாதுகாப்பு படையில் 51 பேருக்கும், இந்தோ திபெத்திய எல்லை காவல் பிரிவில் 16 பேருக்கும், அசாம் துப்பாக்கிப் படை பிரிவில் ஒருவருக்கும் என மொத்தம் 362 பேருக்கு அமைச்சர் நாராயணசாமி பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
விழாவில், ஆவடி சிஆர்பிஎஃப் மையத்தின் டிஐஜி மோ.தினகரன், சிஆர்பிஎஃப் தேர்வு மையத்தின் டிஐஜி எம்.ஜே. விஜய், சிஆர்பிஎஃப் மருத்துவமனை மருத்துவர் எஸ். ஜெயபாலன், அதிகாரிகள், பெற்றோர் பங்கேற்றனர்.