

திருப்புவனம்: சிஏஜி அறிக்கை மக்களவைத் தேர்தலில் எங்களை பாதிக்காது, என மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்தார்.
அவர் நேற்று, சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே யுள்ள கொந்தகை அகழாய்வு, கீழடி அகழ் வைப்பகத்தை பார்வையிட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கீழடி மிகவும் பழமையானது. இங்கு அகழ் வைப்பகம் அழகாகக் கட்டப்பட்டுள்ளது. தமிழகம் பழமையான மாநிலம். பழங்கால மக்களின் தொழில்நுட்பம், நாகரிகத்தை அறிந்து கொள்ள முடிகிறது.
இதன் மூலம் இந்திய நாகரிகமானது, மேற்கத்திய நாகரிகத்தை விட தொன்மையானது என்பது தெரிகிறது. இவை, இந்திய வரலாற்றுக்கு பெருமையை தேடித் தரும். சிஏஜி அறிக்கையில் நிதி செலவழித்ததில் சில குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. அதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த அறிக்கை இடையூறு ஏற்படுத்தினால் உரிய பதில்களை அளிப்போம். மேலும், இது மக்களவைத் தேர்தலில் எங்களை பாதிக்காது. இவ்வாறு அவர் கூறினார். அப்போது, பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட் டோர் உடனிருந்தனர். முன்னதாக, வி.கே.சிங் மானாமதுரையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.