Published : 15 Dec 2017 09:21 AM
Last Updated : 15 Dec 2017 09:21 AM

மத்தியில் மீனவ அமைச்சகம் அமைய குரல் கொடுப்போம்: கன்னியாகுமரி மீனவர்கள் மத்தியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதி

‘மத்தியில் மீனவர்களுக்கு என தனி அமைச்சகம் அமைய நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி குரல் கொடுக்கும்’ என கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் மத்தியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உறுதியளித்தார்.

குமரி மாவட்டத்தில் 30-ம் தேதி ஏற்பட்ட ஒக்கி புயலால் மீனவர்கள் மற்றும் விவசாயிகள் பெரும் பாதிப்படைந்தனர். புயல் பாதிப்பை பார்வையிட தமிழக முதல்வர் பழனி்சாமி, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மற்றும் அரசியல் பிரமுகர்கள் வந்தனர். இந்நிலையில், நேற்று திருவனந்தபுரம் வந்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரளத்தில் புயல் பாதித்த விழிஞ்ஞம், பூத்துறை பகுதிகளுக்கு சென்று, புயலால் உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அங்கிருந்து, கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறை மீனவ கிராமத்துக்குச் சென்றார். கடலுக்குச் சென்று கரை திரும்பாத மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்தார். அப்போது, கடலில் மாயமானவர்களின் குடும்பத்தினர் கதறி அழுதனர். அவர்களுக்கு ராகுல் காந்தி ஆறுதல் கூறினார். மீனவர் பிரதிநிதிகளிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு, அவற்றை நிறைவேற்ற முயற்சி செய்வதாக உறுதியளித்தார்.

பின்னர், மீனவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது: புயல் தாக்கிய அன்றே இங்கு வர வேண்டும் என திட்டமிட்டிருந்தேன். குஜராத் தேர்தல் பணியால் காலதாமதமானது. புயல் தாக்குதல் மிகவும் துயரமானது. மீனவர்கள், விவசாயிகள், பொதுமக்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த துயரத்தால் மன வேதனை அடைந்தேன்.

மத்தியில் விவசாயிகளுக்கு அமைச்சரகம் உள்ளது. மீனவர்களுக்கு என்று அமைச்சரகம் இல்லை. அவ்வாறு மீனவ அமைச்சகம் இருந்திருந்தால் மீட்புப் பணி வேகமாக நடந்திருக்கும். எனவே, மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைவதற்காக நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம். விவசாயிகளுக்கும் புயலால் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது. மீனவர் நலனுக்காகவும், அவர்கள் கோரிக்கை நிறைவேறவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்போம் என்றார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வசந்தகுமார், விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ்குமார், திமுக எம்எல்ஏ மனோதங்கராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விவசாயிகள் அதிருப்தி

சின்னத்துறைக்கு ராகுல் காந்தி வந்தபோது அவரிடம் மனு அளிப்பதற்காக, குமரி மாவட்ட பாசனத்துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ, பூமி பாதுகாப்பு சங்க தலைவர் பத்மதாஸ் உள்ளிட்ட விவசாய பிரதிநிதிகள் மனுக்களுடன் நின்றிருந்தனர்.

ஆனால், திருவனந்தபுரத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக 50 நிமிடத்தில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ராகுல்காந்தி சென்றதால், விவசாயிகளால் அவரை சந்திக்க முடியவில்லை. காலையில் இருந்து காத்திருந்து அதிருப்தியடைந்த விவசாயிகள், ‘எங்கள் மனுக்களைப் பெற்றுக் கொண்டு, வேளாண் பாதிப்பை ராகுல் காந்தி பார்வையிடுவார் என நம்பியிருந்தோம். ஏமாற்றம் அடைந்துள்ளோம்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x