Published : 21 Dec 2017 10:36 AM
Last Updated : 21 Dec 2017 10:36 AM

சேலம் ஆவின் பால் சிங்கப்பூருக்கு ஏற்றுமதி

சேலம் ஆவினில் இருந்து சிங்கப்பூருக்கு பால் ஏற்றுமதி செய்யப்படுகிறது. விரைவில் மலேசியா, கத்தார், ஹாங்காங், இலங்கைக்கும் பால் ஏற்றுமதி செய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 17 இடங்களில் ஆவின் பால் கூட்டுறவு ஒன்றியங்கள் உள்ளன. பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களில் இருந்து சேகரிக்கப்படும் பால், ஆவின் பால் பண்ணைகளில் சுத்திகரிக்கப்பட்டு பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது.

சேலம், நாமக்கல் மாவட்டங்களைக் கொண்ட சேலம் மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியமானது தமிழகத்திலேயே மிக அதிகளவாக நாளொன்றுக்கு 5.5 லட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்து வருகிறது.

இந்நிலையில், சேலம் ஆவின் பால் பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் பால் முதல் முறையாக ஏற்றுமதி செய்யப்படுகிறது. முதல் ஆர்டரில் சிங்கப்பூருக்கு சுமார் ரூ.9 லட்சத்துக்கு பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ஆவின் பால் பண்ணை அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புக்கு ஏற்றுமதிக்கான பால் ஆர்டர் கிடைத்துள்ளது. தமிழகத்தில் சேலம் ஆவின் பால் பண்ணையில் மட்டுமே டெட்ரா பாக்கெட்டிங் வசதி உள்ளது. எனவே, சேலம் ஆவின் பால் பண்ணையில் இருந்து ஏற்றுமதிக்கான பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்காக 3 சதவீதம் கொழுப்புச்சத்து, 8.5 சதவீதம் இதர சத்துகள் கொண்ட ஏற்றுமதிக்கான வேதியியல் தரம் ஆகியவற்றுடன் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.

பின்னர் இது டெட்ரா பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு ‘ஆவின் ஃபுல் க்ரீம் மில்க்’ என்ற பெயரில் ஏற்றுமதிக்கு அனுப்பப்படுகிறது. இதற்காக ஆவின் பாலுக்கு ஐஎஸ்ஓ. தரச்சான்றிதழ், ஜிஎம்பி சான்றிதழ் ஏற்றுமதி ஆய்வு சான்றிதழ் ஆகியவற்றுடன் ஹலால் சான்றிதழும் பெறப்பட்டு தரமான பால் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

ஆவின் நிறுவனம் ஏற்றுமதி செய்துள்ள டெட்ரா பாக்கெட் பால் 6 மாதம் வரையில் கெடாது. அறை வெப்ப நிலையிலேயே பாலை கெடாமல் பாதுகாக்க முடியும். சிங்கப்பூரில் பெரிய டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. முதல் ஏற்றுமதி அனுப்பப்பட்ட நிலையில், அடுத்த ஆர்டருக்கு பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆவின் பாலுக்கு மிகுந்த வரவேற்பு இருப்பதால் சிங்கப்பூருக்கு தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு பால் ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஹாங்காங், மலேசியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கும் சேலம் ஆவின் மூலம் பால் ஏற்றுமதி செய்ய அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x