எஸ்.வி.சேகர் | கோப்புப்படம்
எஸ்.வி.சேகர் | கோப்புப்படம்

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறு: எஸ்.வி.சேகர் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்

Published on

சென்னை: பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்த சர்ச்சைப் பேச்சு தொடர்பான வழக்கின் விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் நடிகர் எஸ்.வி.சேகர் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் தரக்குறைவாக விமர்சித்திருந்த கருத்தை நடிகரும், பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இதைத்தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் பிரிவினர் இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து தவறான தகவலை தெரிவித்தும், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் யூடியூபில் வீடியோ வெளியிட்டதாகவும், எஸ்.வி.சேகருக்கு எதிராக ராஜரத்தினம் என்பவர் அளித்த புகாரிலும் மத்திய குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த இரு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து எஸ்.வி.சேகர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தது .

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணைக்காக நடிகர் எஸ்.வி.சேகர் இன்று சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். இதனையடுத்து, வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 12 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in