2-ஜி ஊழலை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்: அண்ணாமலை விமர்சனம்

2-ஜி ஊழலை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்: அண்ணாமலை விமர்சனம்
Updated on
1 min read

சென்னை: 2-ஜி ஊழலை மக்கள் எளிதில் மறந்துவிட மாட்டார்கள் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருமண விழா ஒன்றில் பேசிய முதல்வர் ஸ்டாலின், சிஏஜி அறிக்கையால் மத்திய அரசின் 7 விதமான ஊழல்கள் அம்பலமாகியிருக்கிறது என்று அப்பட்டமாக பொய் சொல்லியிருக்கிறார்.

சிஏஜி அறிக்கையில், நெடுஞ்சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்துள்ளன என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. துவாரகா விரைவு சாலை அமைப்பதில் செலவினங்கள் அதிகரித்ததற்கு, வடிவமைப்புத் திட்டங்களில் ஏற்பட்ட மாறுதல்தான் காரணம் என்று சிஏஜி அறிக்கையிலேயே குறிப்பிட்டுள்ளார்கள்.

எதற்காக இந்த மாறுதல் என்பதுதான் சிஏஜி அறிக்கையின் கேள்வியே தவிர, ஊழலோ, முறைகேடோ நடந்துள்ளது என்று அறிக்கையின் எந்தப் பக்கத்திலும் கூறப்படவில்லை. உலக அளவில் ஊழலுக்கான அடையாளங்களாக விளங்கும் திமுக, காங்கிரஸ் கட்சிகளுக்கு, எதில் எல்லாம் ஊழல் செய்ய முடியும் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும்.

மாநகராட்சிக்குச் சொந்தமான பூங்காவில் நிகழ்ச்சி நடத்த, மாநகராட்சி ஆணையரிடமே பணம் வசூலிக்கும் அவலத்தில் தமிழகத்தின் தலைநகரத்தை வைத்திருக்கும் திமுகவினர், சுங்கச் சாவடிகளிலும் இதுபோல வசூலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனரா?

2-ஜி ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையை அத்தனை எளிதாக நாட்டு மக்கள் மறந்துவிட மாட்டார்கள். ஊழல், முறைகேடு, மோசடி, அரசுக்கு இழப்பு என்ற வார்த்தைகள் அனைத்தும் 2-ஜி ஊழல் குறித்த சிஏஜி அறிக்கையில் இருந்தது.

நேர்மையான பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் மீது திமுக வீண் பழி சுமத்துவதை, எக்காலத்திலும் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in