

ஓசூர்/திருவண்ணாமலை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய தேர்வின்போது, மைக்ரோபோனை பயன்படுத்தி முறைகேடாகத் தேர்வு எழுத முயன்ற இளைஞர் மற்றும் அதற்கு உதவிய அவரது தங்கை ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். கர்ப்பிணி என கூறி கழிவறைக்கு சென்ற தேர்வர், செல்போன் மூலம் முறைகேட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (டிஎன்யுஎஸ்ஆர்பி) சார்பில் காவல் உதவி ஆய்வாளர் பணிக்கான தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த தேர்வின்போது, ஊத்தங்கரை அருகே அச்சூரைச் சேர்ந்த நவீன்(22) என்பவர் மைக்ரோபோனை பயன்படுத்தி முறைகேடாகத் தேர்வு எழுத முயன்றது தெரியவந்தது. தேர்வு அறையிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.
ஓசூர் அட்கோ போலீஸார் விசாரணையில், மைக்ரோபோன் உதவியுடன் தேர்வு எழுத நவீனுக்கு அவரது தங்கை சித்திரலேகா(19) உதவியது தெரியவந்தது. இதையடுத்து, இருவர் மீதும் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீஸார் இருவரையும் நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கர்ப்பிணி பெண்: இதேபோன்று, திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்ற தேர்வில் பங்கேற்ற பெண் ஒருவர், கைபேசியை பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் கூறும்போது, “லாவண்யா என்ற பெண், தேர்வு தொடங்கிய சில நிமிடங்களில், தான் கர்ப்பிணியாக உள்ளதால் கழிப்பறைக்கு செல்ல அனுமதி கேட்டுள்ளார். தேர்வு விதிப்படி, கழிப்பறை செல்ல அனுமதி இல்லை என்றாலும், கர்ப்பிணி என்பதால் அனுமதிக்கப்பட்டார். அவருடன் 2 பெண் காவலர்கள் சென்றனர்.
ஆனால், சுமார் 25 நிமிடங்களாக அவர் திரும்பி வராததால், தேர்வு அறை கண்காணிப்பாளருக்கு சந்தேகம் ஏற்பட்டு, பெண்ணின் இருக்கைக்கு சென்று பார்த்தார். அப்போது, கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து, தேர்வு மைய கண்காணிப்பு அதிகாரியிடம் புகார் தெரிவித்தார். அதன்பேரில், கழிப்பறையில் இருந்து வெளியே வந்த பெண்ணிடம் விசாரணை நடத்தப்பட்டு, சோதனையிட்டதில் கேள்வித்தாள், விடைத்தாளை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விடைத்தாளில் விடைகள் குறிப்பிடப்பட்டிருந்தன.
கழிப்பறையை சோதனையிட்டதில், கைபேசி இருந்துள்ளது. அதில்கேள்வித்தாள் படம் பிடிக்கப்பட்டு, வெளிநபருக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி வைத்து விடைகளை பெற்றது உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, தேர்வு அறையில் இருந்து லாவண்யா வெளியேற்றப்பட்டார்.
உதவிய காவலர்கள்: இவரது கணவர், சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் பணியிலும், உறவினர் ஒருவர் திருவண்ணாமலையில் காவல் ஆய்வாளர் பணியிலும் உள்ளனர். அப்பெண்ணுக்கு காவல் துறையில் பணியாற்றும் 4 பேர் உதவி செய்தது தெரியவந்தது. பெண்ணிடம் கைபேசியில் மறுமுனையில் பேசியவரின் விவரம் தெரியவந்துள்ளது. இதுகுறித்து, எஸ்.பி. கார்த்திகேயன் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது” என்றனர்.