Published : 28 Aug 2023 06:16 AM
Last Updated : 28 Aug 2023 06:16 AM
திருச்சி: மக்களவைத் தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டார் என்று அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் நேற்று தெரிவித்தார்.
திருச்சி ஸ்ரீரங்கம் ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பில், திருவானைக்காவல் வெங்கடேஸ்வரா திரையரங்கில் ஜெயிலர் திரைப்பட வெற்றி விழா நேற்று நடைபெற்றது.
இதில், நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேக் வெட்டி, இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டார்.
இதைத்தொடர்ந்து, சத்திய நாராயணராவ் செய்தியாளர்களிடம் கூறியது:
ஜெயிலர் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றுள்ளது. சூப்பர் ஸ்டார் என்பது மக்கள் ரஜினிக்கு அளித்த பட்டம். அது, இனிமேல் யாருக்கும் இல்லை. அவர் இருக்கும் வரை அவர் ஒருவரே சூப்பர் ஸ்டார்.
ரஜினி அடுத்தடுத்த படங்களில் நடிக்க இருக்கிறார். அவர் மூலம் திரையுலகத்தை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், அவர்களது குடும்பத்தினர் பலன் பெறுகின்றனர். விரைவில் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது.
ரஜினி அரசியலுக்கு வரமாட்டார். 2024 மக்களவைத் தேர்தலில் ரஜினி யாருக்கும் ஆதரவு கொடுக்க மாட்டார். ரசிகர்கள், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப நல்லவர்களுக்கு வாக்களித்து தேர்ந்தெடுக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT