Published : 02 Dec 2017 12:05 PM
Last Updated : 02 Dec 2017 12:05 PM

பாபநாசத்தில் ஒரே நாளில் 451 மி.மீ. மழை: தாமிரபரணியில் பெருக்கெடுத்த வெள்ளம்

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசத்தில் ஒரே நாளில் 451 மி.மீ. மழை பெய்தது. இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்யும் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. ‘ஒக்கி’ என பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாக தென் தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 29-ம் தேதி இரவு தொடங்கிய மழை, நேற்று 3-வது நாளாக நீடித்தது. அவ்வப்போது மிதமான மழையும், சில நேரங்களில் கன மழையும் பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தனர்.

மழை அளவு விவரம்

நேற்று காலை 8.30 மணி வரை 24 மணி நேரத்தில் பாபநாசத்தில் அதிகபட்சமாக 451 மி.மீ. மழை பெய்தது.

மாவட்டத்தில் மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:

மணிமுத்தாறு- 378.6, சேர்வலாறு- 192, தென்காசி- 168.80, கடனாநதி அணை- 160, அடவிநயினார் கோவில் அணை- 145, கொடுமுடியாறு அணை- 142, குண்டாறு அணை- 139, செங்கோட்டை- 121, ஆய்க்குடி- 120, அம்பாசமுத்திரம்- 103, ராதாபுரம்- 94, ராமநதி அணை- 92, சங்கரன்கோவில்- 89.50, சிவகிரி- 81.30, கருப்பாநதி அணை, நம்பியாறு அணையில் தலா 75, நாங்குநேரி- 66, சேரன்மகாதேவி- 62, பாளையங்கோட்டை- 50, திருநெல்வேலி- 46.10 மி.மீ மழை பெய்துள்ளது.

மாவட்டத்தில் சராசரியாக ஒரே நாளில் 140.87 மி.மீ. மழை பெய்துள்ளது.

அணைகள் நிலவரம்

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மிக கனமழை பெய்துள்ளது. இதனால், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நேற்று காலை நிலவரப்படி பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கு விநாடிக்கு 24,360 கனஅடி தண்ணீர் வந்தது. 5,766 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

143 அடி உயரம் உள்ள பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11.65 அடி அதிகரித்து, 129.10 அடியாக இருந்தது. 156 அடி உயரம் உள்ள சேர்வலாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 25.78 அடி அதிகரித்து 147.14 அடியாக இருந்தது. 118 அடி உயரம் உள்ள மணிமுத்தாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 14 அடி அதிகரித்து 104.25 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 14,155 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

குண்டாறு அணை ஏற்கெனவே முழு கொள்ளளவில் நீடிக்கிறது. அந்த அணைக்கு வரும் 248.60 கனஅடி நீரும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது. நேற்று முன்தினம் பெய்த மழையால் கடனாநதி அணை, கருப்பாநதி அணை, நம்பியாறு அணை, கொடுமுடியாறு அணை ஆகியவை நிரம்பின. இந்த அணைகளுக்கு வரும் நீரும் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

85 அடி உயரம் உள்ள கடனாநதி அணையின் நீர்மட்டம் 83.50 அடியாக இருந்தது. விநாடிக்கு 7,385 கனஅடி தண்ணீர் வந்தது. அணை பாதுகாப்பு கருதி நீர்வரத்து முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்பட்டது.

84 அடி உயரம் உள்ள ராமநதி அணையின் நீர்மட்டம் 82 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 593 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 35 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இந்த அணை நிரம்பும் நிலையில் உள்ளது.

72 அடி உயரம் உள்ள கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 70.21 அடியாக இருந்தது. அணைக்கு வரும் 1,450 கனஅடி நீரும் பாதுகாப்பு கருதி உபரி நீராக வெளியேற்றப்பட்டது.

49.20 அடி உயரம் உள்ள வடக்கு பச்சையாறு அணையின் நீர்மட்டம் 38 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,823 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.

23.60 அடி உயரம் உள்ள நம்பியாறு அணையின் நீர்மட்டம் 22.96 அடியாக இருந்தது. அணைக்கு வரும் 4,895 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டது.

52.50 அடி உயரம் உள்ள கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 52 அடியாக இருந்தது. இந்த அணைக்கு வரும் 6,650 கனஅடி நீரும் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

132.22 அடி உயரம் உள்ள அடவிநயினார் கோவில் அணையின் நீர்மட்டம் 105 அடியாக இருந்தது. இந்த அணைக்கு விநாடிக்கு 412 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 50 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

வெள்ளப்பெருக்கு

பாபநாசம் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மட்டுமின்றி கடனாநதி அணை, கருப்பாநதி அணை ஆகியவற்றின் உபரி நீரும் கலந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரு கரைகளையும் தொட்டபடி செல்லும் வெள்ளத்தில் அமலைச் செடிகள், மரக்கிளைகள் அடித்து வரப்பட்டன.

திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் உள்ள குறுக்குத்துறை முருகன் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது. கோயிலின் பெரும் பகுதி வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் இருந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x