Published : 28 Aug 2023 06:05 AM
Last Updated : 28 Aug 2023 06:05 AM

பெற்றோருடன் குளித்தபோது சோகம்: மெரினாவில் நீச்சல் குளத்தில் மூழ்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

அனிருத்

சென்னை: மெரினாவில் உள்ள நீச்சல் குளத்தில் பெற்றோருடன் குளித்தபோது 5 வயது சிறுவன் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளது. சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் வசிப்பவர் ஹரிகரன். தனியார் நிறுவனம் ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்றுமுன்தினம் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் மெரினா கடற்கரைக்கு சுற்றுலாவாக வந்தார். அங்கு பல்வேறு பகுதிகளை சுற்றிப்பார்த்த அவர்கள் மதியம் அண்ணாசதுக்கம் பேருந்து நிறுத்தம் அருகேஉள்ள அண்ணா நீச்சல் குளத்தில் குளிக்க முடிவு செய்தனர்.

பெரியவர்கள் சிறியவர்கள் எனமொத்தம் 6 பேர் குளிக்க டிக்கெட்எடுத்தனர். அதில், ஹரிகரன் அவரதுஉறவினர்கள் பெரியவர்களுக்கான நீச்சல் குளத்தில் குளித்தனர். ஹரிகரனின் 5 வயது மகன் அனிருத், 7 வயதுடைய மற்றொரு மகன் மற்றொரு நீச்சல் குளத்தில் குளித்துக் கொண்டிருந்தனர். அவர்களை சிறுவர்களின்பாட்டி வெளியே நின்று கவனித்துக் கொண்டிருந்தாராம்.

இந்நிலையில், அனைவரும் குளித்து வெளியேறிய நிலையில் அனிருத் மட்டும் வரவில்லை. அவன்காணாததைக் கண்டு ஹரிகரன் மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அங்கே சுற்றி பார்த்தனர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து நீச்சல் குள பராமரிப்பாளர்கள் மற்றும் பணியாளர்கள் உதவியுடன் தேடியபோது நீச்சல் குளத்தில் நீருக்கடியில் மயங்கிய நிலையில் அனிருத் மீட்கப்பட்டார்.

உடனடியாக அவர் கஸ்தூரிபா காந்தி தாய் சேய் நல (கோஷா) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதித்த மருத்துவர்கள் அனிருத் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பெற்றோரின் கவனக்குறைவே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம்என கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து அண்ணாசதுக்கம் காவல் நிலைய ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். பெற்றோருடன் குளிக்க சென்ற சிறுவன் நீச்சல்குளத்தில் உயிரிழந்துள்ளது பெரும்சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ரூ.3 லட்சம் நிவாரணம்: முதல்வர் ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நீச்சல் குளத்தில் ஆக.26-ம் தேதி மதியம் குடும்பத்துடன் நீந்த வந்த பள்ளிக்கரணை பகுதியைச்சேர்ந்த அனிருத் என்ற 5 வயது சிறுவன், எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி இறந்த செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமடைந்தேன்.

சிறுவனின் இறப்பு குறித்து துறை ரீதியான விசாரணை நடத்திஉரிய நடவடிக்கை எடுக்க அலுவலர்களை அறிவுறுத்தியுள்ளேன். அனிருத்தை இழந்துவாடும் அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அனிருத்குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நீச்சல் குளம் தற்காலிக மூடல்: அண்ணா நீச்சல் குளம் தற்காலிகமாக மூடப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை நீச்சல்குளம் செயல்படாது என்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x