Published : 28 Aug 2023 06:10 AM
Last Updated : 28 Aug 2023 06:10 AM
சென்னை: சென்னை எழும்பூர்-கடற்கரை இடையே 4-வது புதிய பாதை அமைக்கும் பணிகள் காரணமாக, சிந்தாதிரிப்பேட்டை-கடற்கரை இடையே மின்சார ரயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இது, 7 மாதங்களுக்கு அமலில் இருக்கும்.
இதன் காரணமாக, சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து 140 பேருந்து சேவைகள் கூடுதலாக இயக்கப்படுகின்றன. சென்னை எழும்பூர்-கடற்கரை இடையேயான 4-வது பாதை சுமார் ரூ.280 கோடி மதிப்பில் 4 கி.மீ.தொலைவுக்கு அமைகிறது. இப்பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கப்படவுள்ளது.
இதன் காரணமாக, சென்னை கடற்கரை-சிந்தாதிரிப்பேட்டை இடையே ரயில்சேவை நேற்றுமுதல் ரத்துசெய்யப்பட்டது. அடுத்த 7 மாதங்களுக்கு சிந்தாதிரிப்பேட்டை-வேளச்சேரி இடையே மட்டும் மின்சார ரயில் இயக்கப்படும்.
வேளச்சேரி-சென்னை கடற்கரை நோக்கி இயக்கப்பட்ட மின்சார ரயில்கள் சிந்தாதிரிப்பேட்டையில் நிறுத்தப்பட்டன. இதுபோல, கடற்கரைக்கு பதிலாக, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்பட்டன. கடற்கரை-வேளச்சேரி இடையே 122 மின்சார ரயில் சேவைகள் இயக்கப்பட்ட நிலையில், நேற்று முதல் 80 சேவை மட்டுமே இயக்கப்பட்டன.
இதுபோல, கும்மிடிப்பூண்டி, ஆவடி, அரக்கோணத்தில் இருந்து வேளச்சேரிக்கு செல்ல வேண்டிய 59 மின்சார ரயில் சேவைகள் கடற்கரை வரை மட்டுமே இயக்கப்பட்டன.
வேளச்சேரியில் இருந்து சிந்தாதிரிப்பேட்டைக்கு முதல் ரயில் காலை 5 மணிக்கும், கடைசி ரயில் இரவு 10.15 மணிக்கும் இயக்கப்பட்டன. இதுபோல, சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து முதல் ரயில் காலை 5.40 மணிக்கும், கடைசி ரயில் இரவு 11.05 மணிக்கும் இயக்கப்பட்டன.
விடுமுறை நாளான நேற்று (ஆக.27) சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து ஒவ்வோர் 20 நிமிட இடைவெளிக்கும் வள்ளலார் நகர் வரை ஒரு மாநகர போக்குவரத்துக் கழகபேருந்து இயக்கப்பட்டது. இதுகுறித்து அறிவிப்புப் பலகை சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளது.
பேருந்து சேவைகள் குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியதாவது: சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் முதல் வள்ளலார் நகர் வரையிலான இரு மார்க்கத்திலும் 5 பேருந்துகள் மூலமாக தலா 140 பேருந்து சேவைகள் இயக்கப்பட உள்ளன. வார நாள்களில் 10 பேருந்துகள் மூலமாக இருமார்க்கங்களில் தலா 280 பேருந்து சேவைகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவை சென்ட்ரல் ரயில் நிலையம், பிராட்வே, கடற்கரை ரயில் நிலையம், ஸ்டான்லி மருத்துவமனை, மின்ட் வழியாக இயக்கப்படும். மேலும் 30 பேருந்துகள் சிந்தாதிரிப்பேட்டை ரயில் நிலையம் வழியாகத் திருப்பி விடப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT