

சென்னை: வணிகவரித் துறை ஆணையர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வணிகவரித் துறையின் சென்னை (வடக்கு) கோட்டத்துக்கு உட்பட்ட மோனிகா மெட்டல்ஸ் நிறுவனத்தில் கடந்த 2012-ம் ஆண்டு திடீர் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது, போலி பில்கள் மூலம் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டு, வரி விதிப்பு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன.
மேலும், விதிக்கப்பட்ட ஆணையின்படி வரி பாக்கியை செலுத்தாததால், சவுகார்பேட்டை பகுதியில் உள்ள நிறுவனத்தின் சொத்துகள் முடக்கப்பட்டன. கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள வரி பாக்கியை வசூலிக்க வணிகவரித் துறை அலுவலர்கள் தொடர் நடவடிக்கை எடுத்தனர்.
தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்பேரில் நிறுவனத்தின் 3 சொத்துகள் ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் ரூ.3.90 கோடி வரி பாக்கி வசூலிக்கப்பட்டு, அரசு கருவூலத்தில் செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.