ஐஎம்எப்எஸ் அமைப்பு குழு தமிழ்நாடு பிரிவு சார்பில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது. படம்: எஸ்.சத்தியசீலன்
ஐஎம்எப்எஸ் அமைப்பு குழு தமிழ்நாடு பிரிவு சார்பில், சென்னை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில் விழிப்புணர்வுப் பேரணி நேற்று நடைபெற்றது. படம்: எஸ்.சத்தியசீலன்

கல்வி, ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த வலியுறுத்தி பேரணி: ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்பு

Published on

சென்னை: கல்வி, ஆராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்தல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் சென்னையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்தியாவின் முதன்மை ஆராய்ச்சி நிறுவனங்களை சேர்ந்த விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பில் 'இந்தியா மார்ச்பார் சயின்ஸ்' எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதன்மூலம் அறிவியலின் முக்கியத்துவத்தையும், அறிவியல் மனப்பான்மையையும் வளர்க்கும் நோக்கத்துடன் ‘அறிவியலுக்கான இந்தியப் பேரணி’ எனும் விழிப்புணர்வு நிகழ்ச்சி, 2017-ம் ஆண்டுமுதல் பல்வேறு நகரங்களில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்கான முதலீடுகளை அதிகரிக்கவும், அறிவியல் கருத்துகளை பரப்பவும்வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் விழிப்புணர்வு பேரணி நேற்று நடைபெற்றது.

அதன் ஒருபகுதியாக சென்னை பெசன்ட் நகர் கடற்கரை சாலையில் நடைபெற்ற பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அறிவியல் ஆராய்ச்சிக்கு மத்திய பட்ஜெட்டில் 10 சதவீதம்,ஜிடிபியில் 3 சதவீதம் ஒதுக்க வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாத்து காலநிலை மாற்றத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதுதொடர்பாக அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் கூறும்போது, ‘‘அறிவியலுக்கு முரணான கருத்துகளை கொண்ட இந்திய அறிவியல் தொகுப்பை (Indian Knowledge System) கல்வி திட்டத்தில் சேர்க்கக் கூடாது. நீக்கப்பட்ட டார்வினின் பரிணாம வளர்ச்சி,மென்டலீவ் தனிம அட்டவணை போன்ற பாடங்களை மீண்டும் பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும்.ஆராய்ச்சி மாணவர்களுக்கான உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in