Published : 20 Dec 2017 10:41 AM
Last Updated : 20 Dec 2017 10:41 AM

மதுரை ஆதீனம் மடத்தின் 293-வது மடாதிபதியா? - நித்யானந்தாவுக்கு நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

மதுரை ஆதீனம் மடத்துக்குள் நுழைய விதிக்கப்பட்ட தடையை விலக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில் ஆதீன மடத்தின் 293-வது மடாதிபதி என குறிப்பிட்டதற்காக நித்யானந்தாவை உயர் நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.

மதுரை மீனாட்சி பிள்ளைகள் அறக்கட்டளை தலைவர் எம்.ஜெகதலபிரதாபன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை ஆதீனம் மடத்தையும், ஆதீனத்தின் சொத்துக்களையும் கைப்பற்ற நித்யானந்தா திட்டமிட்டுள்ளார். மதுரை ஆதீனம் மடத்துக்குள் நுழையவும், அருணகிரிநாதரின் நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு நிரந்தர தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, ஆதீன மடத்துக்குள் நித்யானந்தா, அவரது ஆட்கள் நுழைவதற்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த தடையை விலக்கக்கோரி நித்யானந்தா சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தன்னை மதுரை ஆதீனம் மடத்தின் 293-வது ஆதீனமாக நித்யானந்தா குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘நித்யானந்தா தனது மனுவில், தான் மதுரை ஆதீனம் மடத்தின் 293-வது மடாதிபதியாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். 292-வது ஆதீனம் உயிருடன் இருக்கும்போது 293-வது ஆதீனம் என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படியிருக்கும்போது நித்யானந்தா தன்னை 293-வது ஆதீனம் எனக் குறிப்பிட்டது தவறு. இதற்காக அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும். நித்யானந்தா தனது மனுவை திரும்பப்பெற வேண்டும். இல்லாவிட்டால் நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்கும்’ என எச்சரித்தார்.

கூடுதல் அரசு வழக்கறிஞர் டி.எஸ்.முகமதுமொய்தீன் வாதிடும்போது, ‘நித்யானந்தாவை நியமனம் செய்த அருணகிரிநாதரே அவரது நியமனத்தை ரத்து செய்துவிட்டதாக அறிவித்துள்ளார்’ என்றார்.

தொடர்ந்து நித்யானந்தா நியமனம் தொடர்பாக இரு வழக்குகளில் இதே உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதியும், அமர்வும் பிறப்பித்த உத்தரவுகளில் நித்யானந்தாவுக்கும் மதுரை ஆதீன மடத்துக்கும் சம்பந்தம் கிடையாது என தெளிவாக கூறப்பட்டுள்ளது என நீதிபதி தெரிவித்தார்.

பின்னர், நித்யானந்தா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நித்யானந்தாவை 293-வது மடாதிபதியாகக் குறிப்பிட்டதற்கு வருத்தம் தெரிவித்தார். நீதிமன்றத்தின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாகவும், இந்த மனுவை திரும்பப் பெறுவதாகவும் தெரிவித்தார். இதற்கு அனுமதி வழங்கி விசாரணையை ஜன. 3-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x