Published : 20 Dec 2017 10:38 AM
Last Updated : 20 Dec 2017 10:38 AM

நதிகளை மீட்போம் இயக்கத்துக்கு தேசிய, உலக அங்கீகாரம்: பரிந்துரைகளை பரிசீலிக்க குழுவை நியமித்தது மத்திய அரசு

நதிகளை மீட்போம் இயக்கத்துக்கு தேசிய அளவிலும், உலக அளவிலும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில் நதிகள் மிக வேகமாக வற்றி வருகின்றன. நதிகளைக் காக்கும் முயற்சியில் ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் கடந்த செப். 3-ம் தேதி 'நதிகளை மீட்போம்' எனும் இயக்கத்தை தொடங்கி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இதற்கு சுமார் 16 கோடி மக்கள் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

கடந்த அக்.3-ம் தேதி பிரதமர் மோடியை ஜக்கி வாசுதேவ் சந்தித்து 'நதிகளை மீட்போம்' திட்ட விளக்க பரிந்துரையை வழங்கினார். விவசாயம், சுற்றுச்சூழல், நீர் மேலாண்மை, பொருளாதாரம் ஆகிய துறைகளில் சிறந்த வல்லுநர்களால் உருவாக்கப்பட்ட இப்பரிந்துரையில் நதிகளை மீண்டும் பெருக்கெடுத்து ஓடச் செய்யும் விரிவான திட்டங்கள் அடங்கியுள்ளன.

நதிகளை மீட்போம் இயக்க திட்ட பரிந்துரைகளைப் பரிசீலிக்க மத்திய அரசு, நிதி ஆயோக் தலைமையில் ஒரு செயற்குழுவை நியமித்துள்ளது.

இதில் நீர்வளம், சுற்றுச்சூழல், விவசாயம், உள்ளிட்ட 6 துறைகளின் செயலாளர்கள் இருப் பார்கள்.

நதிகளை மீட்போம் இயக்க செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்த ஈஷா அறக்கட்டளை சமீபத்தில் ஒரு தேசிய குழுவை அறிவித்தது. அக்குழு அரசு, தொழிற்சாலைகள், விவசாயிகள், நிபுணர்கள் என பல்வேறு தரப்பினருடன் பேச்சு நடத்தி முக்கிய முடிவுகளைக் கலந்து ஆலோசிக்கும்.

கர்நாடகம், மகாராஷ்டிரம், பஞ்சாப், குஜராத், அசாம், சத்தீஸ்கர் ஆகிய 6 மாநிலங்கள் ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து அந்த மாநிலங்களின் பசுமை போர்வையை உயர்த்தவும், நதிகளுக்கு புத்துயிர் ஊட்டவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

இந்நிலையில் ஜெர்மனியின் பான் நகரில் நேற்று (டிச.19) நடைபெற்ற உலக இயற்கை மன்றம் 2017 நிகழ்ச்சியில், ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் எரிக்சோலேம் பேசும்போது, பல்வேறு சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கு ‘நதிகளை மீட்போம்' இயக்கத்தை ஒரு முன்மாதிரியாக வைத்து செயலாற்றுவது குறித்து உரையாற்றினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x