Published : 27 Aug 2023 04:59 PM
Last Updated : 27 Aug 2023 04:59 PM

மேட்டூர் அணை கொள்ளளவை 30 டி.எம்.சி அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்துங்கள்: ராமதாஸ் 

ராமதாஸ் | கோப்புப் படம்.

சென்னை: மேட்டூர் அணை கொள்ளளவை 30 டி.எம்.சி அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்துங்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''மேட்டூர் அணையை தூர்வாருவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் அதன் கொள்ளளவை 30 டி.எம்.சி அதிகரிக்கும் திட்டத்துக்கு நிதிப்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை என்று வெளியாகும் செய்திகள் பெரும் ஏமாற்றமளிக்கின்றன. காவிரி படுகை வளம் கொழிக்கும் பூமியாக தொடர்வதை உறுதி செய்வதற்கான இந்தத் திட்டத்திற்கு நிதி ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாட்டில் கட்டப்பட்டுள்ள ஒரே நீர்த்தேக்கமான மேட்டூர் அணையின் இப்போதைய கொள்ளளவு 93 டி.எம்.சி; நீர்மட்டம் 120 அடி ஆகும். மேட்டூர் அணையை தூர் வாருவதன் மூலம் அடுத்த ஐந்தாண்டுகளில் அதன் கொள்ளளவை 30 டி.எம்.சி, அதாவது 123 டி.எம்.சியாக உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசின் நீர்வளத்துறை தயாரித்திருக்கிறது. ஆனால், இந்தத் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளிக்கவில்லை. தமிழக அரசின் இந்த முடிவுக்கு நிதி நெருக்கடி தான் காரணம் என்று கூறப்படுகிறது. தமிழக அரசின் இந்த முடிவு மிகவும் நல்வாய்ப்புக் கேடானது.

மேட்டூர் அணையை தூர்வாரி அதன் கொள்ளளவை அதிகரிப்பதற்கான திட்டத்தை அடுத்த ஐந்தாண்டுகளில் செயல்படுத்த ரூ.3,000 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. மேட்டூர் அணையில் கொள்ளளவு அதிகரிக்கப்படுவதால் கிடைக்கும் பயன்களுடன் ஒப்பிடும் போது இந்த செலவு மிகவும் குறைவாகும்.

தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஒரே நீர்த்தேக்கம் மேட்டூர் அணை மட்டும் தான். இதன் கொள்ளளவு 93 டி.எம்.சி மட்டும் தான். அதேநேரத்தில் கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளில் கட்டப்பட்டுள்ள அணைகளின் கொள்ளளவு 114.57 டி.எம்.சி ஆகும். சுமார் 70 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகதாது அணை கட்டப்பட்டால், கர்நாடகத்தில் காவிரியின் கொள்ளளவு 184.57 டி.எம்.சியாக அதிகரிக்கும். இது மேட்டூர் அணையின் கொள்ளளவை விட இரு மடங்கு ஆகும். மேட்டூர் அணை முழுமையாக நிரம்பியிருந்தாலும் கூட, அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு எந்த பருவத்தின் சாகுபடியையும் முழுமையாக சாதிக்க முடியாது. அதற்கேற்ப நீர் தேக்கும் அளவு அதிகரிக்கப்பட வேண்டும்.

மற்றொருபுறம் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 100 டி.எம்.சி நீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாக கடலுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறோம். கடந்த ஆண்டில் மட்டும் 500 டி.எம்.சி தண்ணீர் யாருக்கும் பயன்படாமல் வீணாக கடலுக்கு சென்றது. நடப்பாண்டில் குறுவை பயிர்களைக் காக்க 50 டி.எம்.சி தண்ணீர் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாட்டின் நில அமைப்பின் காரணமாக மேட்டூர் அணைக்கு கீழே நீர்த்தேக்கங்களை கட்ட முடியாது; சிறிய அளவிலான தடுப்பணைகளை மட்டும் தான் கட்ட முடியும். சிதம்பரம் அருகே ஆதனூர் என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணையின் மொத்த மதிப்பீடு ரூ.500 கோடி ஆகும். ஆனாலும் அதன் முழு கொள்ளளவு 0.334 டி.எம்.சி மட்டும் தான்.

30 டி.எம்.சி கொள்ளளவுள்ள தடுப்பணைகளை கட்ட வேண்டும் என்றால், அதற்கு ஏறக்குறைய ரூ.50,000 கோடி செலவாகும். அதைவிட 15 மடங்கிற்கும் குறைவான செலவில் அணையின் கொள்ளளவை அதிகரிக்க முடியும் எனும் போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தமிழக அரசு திட்டமிட்டால், மேட்டூர் அணையை தூர்வாரி அதன் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டத்தை எந்த நிதி நெருக்கடியும் இல்லாமல் மிகவும் எளிதாக செயல்படுத்த முடியும். மேட்டூர் அணையின் கொள்ளளவை அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரூ.3000 கோடி செலவாகும் என்றாலும் கூட அதை ஒரே சமயத்தில் செலவழிக்க வேண்டியிருக்காது; ஐந்தாண்டுகளில் 5 சம தவணைகளாக திட்டத்தை செயல்படுத்தும் போது ஆண்டுக்கு ரூ.600 கோடி செலவிடுவது பெரும் சுமையாக இருக்காது. அதுமட்டுமின்றி, மேட்டூர் அணையை தூர்வாரும் போது, அதிலிருந்து கிடைக்கும் மண்ணை விற்பனை செய்ய முடியும் என்பதால் செலவின் ஒரு பகுதியை, மண் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு சமாளிக்க முடியும்.

எனவே, காவிரி பாசனப் பகுதிகளின் வளத்தையும், உழவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு மேட்டூர் அணையை தூர்வாரி அதன் கொள்ளளவை 30 டி.எம்.சி அதிகரிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும். அதற்கான அரசாணையை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x