Last Updated : 26 Dec, 2017 08:38 AM

 

Published : 26 Dec 2017 08:38 AM
Last Updated : 26 Dec 2017 08:38 AM

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வீழ்த்த நினைத்து வீழ்ந்த திமுகவின் வியூகம்: அதிர்ச்சி தோல்விக்கு என்ன காரணம்?

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் தொகையைப் பறி கொடுத்து திமுக படுதோல்வி அடைந்திருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நடந்து முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான திமுக 24,651 வாக்குகளை மட்டுமே பெற்று டெபாசிட் தொகையை பறிகொடுத்துள்ளது. கடந்த 2016 பொதுத்தேர்தலில் ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட சிம்லா முத்துச்சோழன் 57,673 வாக்குகளைப் பெற்ற நிலையில், தற்போது இதில் பாதியைக்கூட பெறாத நிலை ஏற்பட்டிருப்பது அக்கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த ஏப்ரலில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது போட்டியிட்ட என்.மருதுகணேஷ் இந்த முறையும் போட்டியிட்டார். ஆர்.கே.நகர் தொகுதியிலேயே பிறந்து வளர்ந்த அவர், கடுமையாக உழைத்தும் 3-வது இடமே கிடைத்துள்ளது. இது தொடர்பாக திமுக நிர்வாகிகளிடம் பேசியபோது பல்வேறு தகவல்களைத் தெரிவித்தனர்.

வெற்றியை எளிதாக நினைத்த திமுக

கடந்த ஏப்ரலில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது திமுக திட்டமிட்டு களப்பணியாற்றியது. அந்த வேகத்தில் பாதியைக்கூட இப்போது காட்டவில்லை என்கின்றனர் அக்கட்சியினர். அதிமுக இரண்டாகப் பிளவுபட்டுள்ளதால் வாக்குகள் இரண்டாகப் பிரியும். எனவே, கண்டிப்பாக வெற்றி கிடைக்கும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் நினைத்தனர். இதனால் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டவில்லை. பிரச்சாரத்தில் காட்டிய வேகத்தை வாக்குச் சாவடி அளவில் கமிட்டி அமைப்பது, அவர்கள் மூலமாக மக்களைச் சந்திப்பது ஆகியவற்றில் காட்டவில்லை. இது தோல்விக்கு முக்கிய காரணமானது என திமுக நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

தினகரனை குறைத்து மதிப்பிட்டது

அரசு அதிகாரத்தின் துணையில்லாமல், சுயேச்சையாக புதிய சின்னத்தில் போட்டியிடும் டிடிவி தினகரன் வாக்குகளைப் பிரிப்பாரே தவிர, வெற்றி பெற முடியாது என ஸ்டாலின் உள்ளிட்டோர் கருதினர். அதிமுக வாக்குகளை மதுசூதனனும், தினகரனும் பிரித்தால் திமுகவுக்கு எளிதில் வெற்றி கிடைக்கும் என கணக்கிட்டனர். இதனால் தினகரனைப் பற்றி கவலைப்படாமல் மதுசூதனன் மட்டுமே தங்களது எதிரி வேட்பாளர் என்பது போல திமுகவின் பிரச்சாரம் அமைந்தது. ஆனால், முடிவுகள் எதிர்மாறாக அமைந்துவிட்டன.

அதிமுகவை வீழ்த்த நினைத்து...

ஆர்.கே.நகரில் அதிமுக வென்றால் முதல்வர் பழனிசாமி அரசு பலம் பெற்றுவிடும் எனவே, அக்கட்சியை தோற்கடிப்பதுடன் 3-வது இடத்துக்கு தள்ள வேண்டும் என திமுக திட்டமிட்டது. அதிமுக 3-வது இடத்துக்கு போக வேண்டுமானால் தினகரன் 2-வது இடத்துக்கு வர வேண்டும். எனவே, தினகரனுக்கு சாதகமாக சில வியூகங்களை திமுக வகுத்ததாகக் கூறப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே விஷால் வேட்புமனு தாக்கல் செய்தார் என்கின்றனர்.

அதிமுக வாக்குகள் பிரிந்து தினகரனுக்கு செல்ல வேண்டும் என நினைத்து திமுக செய்த சில காரியங்கள் அக்கட்சியினரையே பதம் பார்த்து விட்டதாக திமுகவினரே வேதனைப்படுகின்றனர். ‘‘தனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை. அதிமுகவுக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என நினைத்து தினகரனுடன் ஸ்டாலின் ரகசிய உடன்பாடு செய்து கொண்டார். ஆனால் திமுகவுக்கு இரண்டு கண்களும் போய்விட்டது’’ என முதல்வர் கே.பழனிசாமி கூறியதை நினைவுபடுத்துகின்றனர் திமுகவினர்.

காலை வாரிய கூட்டணி கட்சிகள்

காங்கிரஸ், மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி என பல்வேறு கட்சிகள் திமுகவுக்கு ஆதரவு தெரிவித்தன.

ஆனால், இக்கட்சிகளின் நிர்வாகிகளையும், தொண்டர்களையும் ஒருங்கிணைத்து களப்பணியாற்ற வைக்க திமுக தவறிவிட்டதாக காங்கிரஸ், விசிக நிர்வாகிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

வெற்றி மிதப்பில் கூட்டணி கட்சிகளை திமுகவின் மாவட்ட நிர்வாகிகள்கூட கண்டுகொள்ளவில்லை. இதனால் தலைவர்கள் வரும்போது பெயரளவுக்கு வந்துவிட்டு கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஒதுங்கிவிட்டனர். அதே நேரத்தில் இப்படி அதிருப்தியில் இருந்த நிர்வாகிகளை தினகரன் தரப்பினர் தக்கபடி கவனித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் கூட்டணி கட்சிகளின் வாக்குகள் திமுகவுக்கு வரவில்லை.

பணத்தை பதுக்கிய நிர்வாகிகள்

தினகரன் மற்றும் அதிமுகவினர், தேர்தல் பணியாற்றிய நிர்வாகிகள் தொண்டர்களுக்கு பணத்தை வாரியிறைத்தனர். ஆனால், திமுகவில் தேர்தல் பணியில் உள்ள தொண்டர்களின் செலவுகளுக்காக கொடுக்கப்பட்ட பணத்தை திமுக பகுதிச் செயலாளர்கள் முழுமையாக கொடுக்காமல் பதுக்கிவிட்டதாக திமுகவினரே புலம்புகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாததால் கிடைத்த பணத்தை இதுவரை செய்த செலவுகளுக்கு ஈடாக எடுத்துக் கொண்டு விட்டதாகத் தெரிகிறது. இதனால் திமுகவினர் தேர்தல் பணிகளில் முனைப்பு காட்டவில்லை.

கைவிட்ட சிறுபான்மையினர்

தினகரனுக்கு எதிரான மத்திய பாஜக அரசின் நடவடிக்கைகளால் சிறுபான்மையினருக்கு அவர் மீது பெரும் அனுதாபம் ஏற்பட்டது. மோடி - கருணாநிதி சந்திப்புக்குப் பிறகு பாஜக மீதான விமர்சனத்தை திமுக குறைத்துக் கொண்டது. இதனால் பாஜகவுடன் திமுக நெருங்குவதாக விமர்சனம் எழுந்தது. இதனால் திமுகவின் வாக்கு வங்கியாக இருந்த சிறுபான்மையினரின் வாக்குகள் தினகரனுக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

என்னதான் பணபலம் வென்று விட்டதாகக் கூறினாலும் டெபாசிட் இழந்தது திமுகவுக்கு ஏற்பட்ட பெரும் தோல்வி. இதற்கான காரணங்களை ஆய்வு செய்து தவறுகளை திருத்திக் கொள்ளாவிட்டால் எதிர்காலம் மோசமாக இருக்கும் என்கின்றனர் திமுகவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x