Published : 27 Aug 2023 01:37 PM
Last Updated : 27 Aug 2023 01:37 PM

CAG அறிக்கையின் மூலம் வெளிச்சத்துக்கு வந்த பாஜகவின் 7 விதமான ஊழல்கள் - முதல்வர் ஸ்டாலின் பட்டியல்

திருவாரூரில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜின் இல்லத் திருமண விழாவில் உரையாற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

திருவாரூர்: சிஏஜி {CAG} அறிக்கையின் மூலம் பாஜகவின் 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாலம் கட்டுமானத் திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்யா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வுத் திட்டம், எச்ஏஎல் விமான வடிவமைப்புத் திட்டம். இந்த 7 திட்டங்களிலும் பல கோடி ரூபாய், ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி மிக தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

நாகை எம்பி செல்வராஜின் இல்லத் திருமண விழா திருவாரூரில் உள்ள பவித்திரமாணிக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி முதல்வர் ஸ்டாலின் பேசியது: " மறைந்த முதல்வர் கருணாநிதி அடிக்கடி கூறுவார், பெரியாரையும், அண்ணாவையும் நான் பார்த்திருக்கவிட்டால், நான் கம்யூனிஸ்ட் கட்சியில்தான் இருந்திருப்பேன் என்று பலமுறை குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

எனவே திமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிக்குமான நட்பு தேர்தல் சமயத்திலும், கூட்டணி நேரத்திலும் மட்டும் ஏற்படக்கூடிய நட்பு அல்ல. கொள்கை ரீதியான நட்பு. எதிர்க்கட்சியாக இருந்தபோதும், ஆளுங்கட்சியாக இருந்தபோதும் அந்த நட்பு தொடர்கிறது. தொடர்கிறது என்றால், இது என்றைக்கும் தொடரும். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில், இந்த கூட்டணி தொடரும் என்பதை, இந்த திருமண விழாவில் நான் உறுதியாக அறிவிக்கிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலை நாம் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி சந்திக்கப் போகிறோம் என்றால், ஏதோ ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் வரக்கூடிய தேர்தலாக மட்டும் அதை நினைத்துவிடக்கூடாது. ஆட்சிமாற்றத்துக்கான தேர்தல் என்றுகூட நினைத்துவிடக்கூடாது. இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இன்றைக்கு சர்வாதிகார ஆட்சியை, பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கக்கூடிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். ஏனென்றால், தமிழகத்தை காப்பாற்றியாச்சு. இந்தியாவை காப்பாற்றக்கூடிய நிலைக்கு நாம் தற்போது வந்திருக்கிறோம். இந்தியாவை காப்பாற்றுவதற்காகத்தான் இப்போது இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது.

பிஹார் மாநிலத்தில் நிதிஷ் குமார் தலைமையில் கூடி, எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றுசேர்ந்து, ஒரு கூட்டணி உருவாக முதல் கூட்டத்தை பிஹாரில் நடத்தினோம். அதன்பின்னர் கர்நாடக மாநில தலைநர் பெங்களூருவில் இரண்டாவது கூட்டத்தை நடத்தினோம். அதில்தான் இந்தியா என்ற பெயரை தேர்வு செய்து கூட்டணிக்கு பெயர் அறிவித்தோம். மூன்றவதாக வரும் ஆக.31 மற்றும் செப்.1 ஆகிய இரண்டு நாட்கள் மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக்கூட்டத்தில், முக்கிய அறிவிப்புகளை எல்லாம் அறிவிக்க உள்ளோம்.நானும் அந்தக் கூட்டத்துக்கு செல்லவிருக்கிறேன்.

தமிழகத்தில் ஒரு நல்லாட்சி உருவாக்கித்தர நீங்கள் எல்லாம் எபப்டி காரணமாக இருந்தீர்களோ, அதேபோல், ஒன்றியத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மூலமாக நடைபெற இருக்கக்கூடிய ஒன்றிய அரசு அமைவதற்கும், அது நல் அரசாக அமைவதற்கும் நீங்கள் காரணமாக இருக்க வேண்டும். தேர்தல் பிரச்ச்ராத்தை இங்கு தொடங்கி வைக்க வேண்டும் என்று முத்தரசன் குறிப்பிட்டார். தொடங்கத்தான் வந்திருக்கிறேன். நான் எப்போதுமே, தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில்தான் தொடங்குவேன். இப்போதும் அதே உணர்வில்தான் இந்த மேடையில் நிற்கிறேன்.

9 வருடமாக மோடி தலைமையில் பாஜக ஆட்சி நடந்துகொண்டு இருக்கிறது. இந்த 9 ஆண்டுகளில், நாங்கள் ஆட்சிக்கு வந்து இதை நிறைவேற்றியிருக்கிறோம், இந்த திட்டங்களைக் கொண்டு வந்திருக்கிறோம், சாதனைகள் செய்திருக்கிறோம்,மக்களுக்கு நன்மைகளை செய்திருக்கிறோம் என்று ஏதாவது அவர்களால் சொல்ல முடிகிறதா? எதுவும் சொல்ல முடியவில்லை. தேர்தலுக்கு முன் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தையெல்லாம் கைப்பற்றி, அதை இந்தியாவுக்கு கொண்டுவந்து, நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் ஒவ்வொருவருக்கு 15 லட்சம் ரூபாய் கொடுக்கப்போவதாக அறிவித்தார். 15 லட்சம் வேண்டாம், ஒரு 15 ஆயிரமாவது கொடுத்தார்களா? 15 ஆயிரம் வேண்டாம், ஒரு 15 ரூபாயாவது கொடுத்தார்களா? இதுவரை கிடையாது.

நாட்டில் உள்ள 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுப்பதாக கூறினார்கள். எங்காவது வழங்கப்பட்டிருக்கிறதா? இல்லை. வேலைகள் பறிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த ஆட்சியினுடைய நிலை. இதைவிட கொடுமை மதத்தை வைத்து ஆங்காங்கே மதக் கலவரங்களை ஏற்படுத்தி நாட்டை இரண்டாக்கி வரும் சூழ்நிலையில் ஒரு கொடிய ஆட்சி இந்தியாவில் நடந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து எல்லாம் கலந்துபேசி, இதற்கு ஒரு முடிவு கட்டவும், தேர்தலில் பாடம் புகட்டவும், இந்தியா கூட்டணியை நாம் அமைத்திருக்கிறோம்.

இதை பிரதமர் மோடியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தமிழகத்தைப் பொறுத்தவரை, எப்படி சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்பு தேர்தல்களில் ஒரு கூட்டணி அமைத்து, வலுவாக நடத்திக் கொண்டிருக்கிறோம். அந்த கூட்டணி தமிழகத்தில் தொடர்ந்து வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை அனைவரும் அறிவர். அப்படிப்பட்ட திமுகவின் கூட்டணியும் இந்தியா என்ற கூட்டணியில் இணைந்திருக்கிறதே, என்ற ஆத்திரம் பிரதமர் மோடிக்கு வந்துவிட்டது.

அதனால்தான், அவர் எங்கே சென்றாலும், சுதந்திர தின நிகழ்ச்சியாக இருந்தாலும், பல்வேறு மாநிலங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாடுகளுக்கு செல்லக்கூடிய நிகழ்ச்சியாக இருந்தாலும், நாம் அமைத்துள்ள கூட்டணியை விமர்சித்து, கொச்சைப்படுத்தி பேசி கொண்டிருக்கிறார். குறிப்பாக திமுகவைப்பற்றி அவரால் பேசாமல் இருக்க முடியவில்லை.

தமிழகத்தில் ஊழல் வந்துவிட்டதாம், 9 ஆண்டுகளாக சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்தியாவில் இருக்கக்கூடிட ஊழலை ஒழித்தே தீருவேன் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார். நான் பிரதமரை பார்த்து அடக்கத்துடன் கேட்டுக் கொள்வது, ஊழலைப் பற்றி பேசக்கூடிய யோக்யதை பிரதமருக்கு உண்டா? உங்களுடைய வண்டவாளங்கள் சிஏஜி அறிக்கையில் ஆதாரங்களுடன் வெளியிடுகின்றனர்.

ஊழல் குறித்து பேசுவதற்கு பாஜகவுக்கு என்ன அருகதை இருக்கிறது. சிஏஜி என்பது மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு இருக்கும் ஒரு அமைப்பு. ஒவ்வொரு வருடமும், அரசின் வரவு செலவுகளை ஆய்வு செய்து அதற்கு ஒப்பீடு வழங்குவது சிஏஜியின் பணி. ஒன்றியத்தில் நடக்கும் பாஜக ஆட்சி ஊழல் ஆட்சி. முறைகேடுகள் அதிகம் கொண்ட ஆட்சி. லஞ்சம் லாவண்யம் பெருத்துப்போன ஆட்சியென்று சிஏஜி அறிக்கை கூறுகிறது. இதன்மூலம் பாஜகவின் 7 விதமான ஊழல்கள் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. பாரத் மாலா திட்டம், துவாரகா விரைவுப் பாலம் கட்டுமானத் திட்டம், சுங்கச்சாவடி கட்டணங்கள், ஆயுஷ்மான் பாரத் திட்டம், அயோத்யா மேம்பாட்டுத் திட்டம், கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வுத் திட்டம், எச்ஏஎல் விமான வடிவமைப்புத் திட்டம். இந்த 7 திட்டங்களிலும் பல கோடி ரூபாய், ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி மிக தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறது. நிதியை கையாளுவதில் மோசடி நடந்துள்ளதாக இந்த அறிக்கை பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில், 99999 99999 என்ற போலி செல்போன் எண்ணில் 7.5 லட்சம் பயனாளிகள் இணைக்கப்பட்டு பச்சையாக ஒரு மோசடியை செய்துள்ளனர். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சிகிச்சைப்பெற்ற நோயாளிகள் 88 ஆயிரத்து 760 பேர் இறந்துவிட்டனர். ஆனால் அவர்கள் இறந்தபிறகும் சிகிச்சையளிக்கப்பட்டதாக கூறி, 2 லட்சத்து 923 காப்பீட்டு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு காப்பீட்டுத் தொகை வழங்கியுள்ளனர்" என்று முதல்வர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x