Published : 27 Aug 2023 10:32 AM
Last Updated : 27 Aug 2023 10:32 AM

தடுப்பணை கட்டியதாக ரூ.30 லட்சம் மோசடி: வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 7 பேர் மீது வழக்கு பதிவு

பெரம்பலூர்: பெரம்பலூரில் தடுப்பணைகள் கட்டாமலேயே கட்டியதாகக் கூறி ரூ.30 லட்சம் முறைகேட்டில் ஈடுபட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் மலையாளப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மஞ்சினபாறை, காந்தி நகர், காட்டுமருதை, கொட்டாரக்குன்று முருகன் கோயில் ஓடைகளின் குறுக்கே நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ் 2019 முதல் 2020 வரையிலான காலக்கட்டத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தில் முறைகேடு நடந்திருப்பதாக பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு அண்மையில் புகார் வந்தது.

இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். இதில், 45 தடுப்பணைகள் கட்டியதாக அரசு ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெறும் 6 தடுப்பணைகள் மட்டுமே கட்டப்பட்டிருந்தன. 39 தடுப்பணைகள் கட்டப்படாமலேயே அரசு நிதி ரூ.30.03 லட்சம் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி ஹேமசித்ரா உத்தரவின் பேரில், வேப்பந்தட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.அறிவழகன் (55), இளநிலைப் பொறியாளர் ஏ.நாகராஜன் (56), வேப்பந்தட்டை வட்டார மேற்பார்வையாளர் டி.மணிவண்ணன் (52), ஒப்பந்ததாரர்கள் வி.ஆர்.துரைசாமி (63), எம்.ராணி (56), சி.சதீஷ்குமார் (39), இ.வெற்றிவேல் (45) ஆகியோர் மீது காவல் ஆய்வாளர் ராமேஸ்வரி 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x