

பொள்ளாச்சி: காயர் மில் தொழிற்சாலையில் உள்ள மோட்டாரில் சிக்கி சிறுவனின் பெருவிரல் துண்டான நிலையில், பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தப்பட்டது.
பொள்ளாச்சி அடுத்த சிஞ்சுவாடியில் உள்ள காயர் மில் தொழிற்சாலையில் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளியின் 3 வயது ஆண் குழந்தை விளையாடி கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக கையை மோட்டாரில் வைத்ததால் வலது கை பெருவிரல் முற்றிலும் துண்டானது. உடனடியாக, அந்த விரலை பாலித்தீன் பையில் வைத்து ஒன்றரை மணி நேர இடைவெளியில் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
இதையடுத்து மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குநர் மீரா ஆலோசனைப்படி, அறுவை சிகிச்சை செய்து குழந்தையின் பெருவிரலை பொருத்த முடிவு செய்யப்பட்டது. மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில், அறுவை சிகிச்சை துறைத் தலைவர் கார்த்திகேயன், ஒட்டு உறுப்பு அறுவை சிகிச்சை நிபுணர் சங்கமித்ரா, அறுவை சிகிச்சை மருத்துவர் மணிமேகலை,
மயக்க மருந்து நிபுணர்கள் அருள்மணி, கிருத்திகா, எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் இசக்கிமுருகன், குழந்தைகள் நல மருத்துவர்கள் சிவசங்கர், அமுதா மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, வெற்றிகரமாக பெருவிரலை மீண்டும் இணைத்தனர்.
இது தொடர்பாக மருத்துவமனைக் கண்காணிப்பாளர் ராஜா கூறும்போது, ‘‘குழந்தையின் உடல்நிலை தற்போது நன்றாக உள்ளது. கட்டை விரல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஒருவாரம் கழித்து மருத்துவர்கள் குழுவினர் ஆய்வு செய்வர். துண்டிக்கப்பட்ட விரலை மீண்டும் பொருத்தும் இந்த அறுவை சிகிச்சை, பொள்ளாச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் முதல்முறையாக மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்றார்.