சென்னை குடிநீர் தேவைக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கிருஷ்ணா நீர் திறப்பு

சென்னை குடிநீர் தேவைக்கு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கிருஷ்ணா நீர் திறப்பு
Updated on
2 min read

சென்னை குடிநீர் தேவைக்காக ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் கிருஷ்ணா நீர் திறந்து விடப்படும் என்று ஆந்திர மாநில அதிகாரிகள் உத்தரவாதம் அளித்திருப்பதாக தமிழக அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

தென்மேற்கு பருவமழை காலத்தில் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீசைலம், சோமசீலா, கண்டலேறு அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக இருக்கும். அவ்வாறு இருக்கும் பட்சத்தில் சென்னை குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூலை 1-ம் தேதி கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு இல்லை என்பதால், ஆந்திர மாநில அரசு ஜூலை 1-ம் தேதி கிருஷ்ணா நீர் திறந்துவிடவில்லை.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், வீராணம் ஆகிய 5 ஏரிகளில் நீர்இருப்பு மிகவும் குறைவாக இருப்பதால், சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் முன்பு, கிருஷ்ணா நீர் திறந்துவிட வேண்டும் என்று தமிழக பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் ஆந்திர மாநில பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளருக்கு ஒருமாதத்துக்கு முன்பு கடிதம் எழுதினார்.

அதன்படி, கிருஷ்ணா நீர் திறந்து விடப்படதாததால், தமிழக பொதுப்பணித் துறை முதன்மைச் செயலாளர் ஆந்திர மாநில பொதுப்பணித் துறை செயலாளருக்கு கடிதம் எழுதினார். அதன்பிறகும் கிருஷ்ணா நீர் திறக்கப்படாததால், தமிழக தலைமைச் செயலாளர் ஆந்திர மாநில தலைமைச் செயலாளருக்கு அண்மையில் கடிதம் எழுதினார்.

இதையடுத்து, “ஆந்திர மாநில பிரிப்பு தொடர்பான பணிகளில் மும்முரமாக இருப்பதால், கிருஷ்ணா நீர் திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது” என்று காரணம் கூறி வந்த ஆந்திர மாநில பொதுப்பணித்துறை உயர் அதிகாரிகள், இப்போது, ‘‘ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல் சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்துவிடப்படும்’’ என்று வாய்மொழியாக உத்தரவாதம் அளித்திருக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் எழுத்துப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. இருப்பினும், அவர்கள் வாக்குறுதி அளித்திருப்பதால் ஆகஸ்ட் 1-ம் தேதிமுதல் கிருஷ்ணா நீர் திறக்கப்படுமென நம்புகிறோம்” என தமிழக பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய நான்கு ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11,057 மில்லியன் கனஅடி. புதன்கிழமை நிலவரப்படி 2,066 மில்லியன் கனஅடி நீர்இருப்பு உள்ளது. இந்த ஏரிகளில் கடந்த ஆண்டு இதேநாளில் 1,124 மில்லியன் கனஅடிதான் நீர்இருப்பு இருந்தது.

இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், “கடந்த ஆண்டு நான்கு ஏரிகளிலும் 1,124 மில்லியன் கனஅடி நீர்இருப்பு இருந்தபோதே சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு வரவில்லை. இந்தாண்டு அதற்கும் அதிகமாகவே நீர்இருப்பு உள்ளது. இது, சென்னை மாநகரின் 2 மாத குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும். அதற்குள் தேவையான அளவு கிருஷ்ணா நீரும் வந்துவிடும். செப்டம்பர் மாதம் வடகிழக்குப் பருவமழையும் தொடங்கிவிடும். எனவே, சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் இல்லவே இல்லை” என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in